ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை 30 நாள் நல்லிணக்க பிணையில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் பல முறை நல்லிணக்க பிணை கேட்டு விண்ணப்பித்திருந்தார். பேரறிவாளன் தந்தை குயில் தாசன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவரைக் காண தனது மகனுக்கு ஒருமாத காலம் நல்லிணக்க பிணை வழங்க வேண்டும் என கடந்த ஜூன் மாதம் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் விண்ணப்பித்திருந்தார்.

அவரது மனு பரிசீலிக்கப்படும் என கடந்த வாரம் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பேரறிவாளனை ஒரு மாதம் நல்லிணக்க பிணையில் விடுவிக்கும் உத்தரவை உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

அதன்படி நாளை முதல் ஒருமாத காலம் பேரறிவாளனுக்கு நல்லிணக்க பிணை வழங்கப்படுகிறது. தற்போது பேரறிவாளன் வேலூர் சிறையில் உள்ளார். நல்லிணக்க பிணை தொடர்பான அரசாணை வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து பேரறிவாளன் நாளை நல்லிணக்க பிணை விடுவிக்கப்படுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.