சுகாதார அமைச்சரான ராஜித சேனாரட்னவிற்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையொன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களை சந்தித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரட்ன,

எனக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினை சேர்ந்த 39 அமைச்சர்கள் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா பிரேரணையினை கையத்துள்ளனர். குற்றங்கள் இல்லாமையாலும், அறியாமையின் நிமித்தமாக குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையளிக்கப்பட்டுள்ளது.

நான் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு மூன்று முறை ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளேன். அதனால் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றங்களை கண்டு நான் வியப்படைகின்றேன்.

நான் நீதிக்கு மதிப்பளித்து என் வேலையினை செய்துவருகின்றேன். கடந்த ஆட்சியின் போது ஊழல் குற்றங்களில் ஈடுப்பட்ட குழுவினர் இணைந்து எனக்கு இன்று நம்பிக்கையில்லா பிரேரணையினை முன்வைத்துள்ளனர். கடந்த அரசாங்கத்திற்கு எதிராக நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் இன்னும் நிறைவடையவில்லை.

மக்களுக்கு விழிப்புணர்வினை கொண்டுவர கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி முதல் நான் பணியாற்றி வருகின்றேன். ஒரு நம்பிக்கையில்லா பிரேரணையல்ல, 10 நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவந்தாலும் ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாது ஒழிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

நான் நம்பிக்கையில்லா பிரேரணையினை இலகுவில் வெற்றி பெறுவேன். இதற்கு ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.