எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷமற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரை ஒரு மேடைக்கு கொண்டுவர  முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளை இணைத்து தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான வியூகம் வகுக்கப்பட வேண்டுமென சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.  

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்து பலப்படுத்தி முன்னோக்கி நகர முயற்சிக்கப்பட வேண்டுமெனவும் சிரேஷ்ட உறுப்பினர்களினால்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்தவையும் சந்திரிக்காவையும் ஒரே தேர்தல் மேடையில் அழைத்து வர முடியாவிட்டால், தனித் தனித் தேர்தல் பிரச்சார மேடைகளில்  அவர்களை பிரசாரத்தில் ஈடுபடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்  எனவும்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சி மறுசீரமைப்பு குறித்து ஜனாதிபதியுடன் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன.