தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. வின் இரு அணிகள் இணைந்து கொண்டன. அணிகள் இணைந்தைமைக்கான அறிவிப்பை ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

அ.தி.மு.க. வின் இரண்டு அணிகள் இணைந்ததையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன் துணை முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்.

தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் கட்சியை ஓ.பன்னீர் செல்வமும் ஆட்சியை முதல்வர் பழனிசாமியும் வழி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.  பொதுக்குழுவைக் கூட்டிக் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைக்கப்பட்டுள்ளன.  இன்று காலை முதல் அ.தி.மு.க. தலைமை அலுவலகம், முதல்வர் இல்லம், க்ரீன் வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இல்லம், அடையாறில் உள்ள டி.டி.வி. தினகரன் இல்லம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் ஆகியன பரபரப்பாக இருந்துவந்த நிலையில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். இருவரும் நேரில் சந்தித்து கைகுலுக்கி மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொண்டனர்.

இதையடுத்து ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அங்கு தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு நிதி மற்றும் வீட்டு வசதித் துறை கொடுக்கப்படவுள்ளது. அதேபோல, மாஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில், புதிதாக தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துக்கள் ! தமிழகம் இன்னும் புதிய உயர்வை தொடும் என நம்புகிறேன் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.