மன்னார் மாவட்டத்தின் சில கிராமங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மின்கட்டணப் பட்டியல் விநியோகிப்பதாகவும்  இதனால் தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் பாதீக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மாந்தை மேற்குப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம், ஆட்காட்டிக்குளம் உள்ளிட்ட சில கிராமங்களில் மின் வாசிப்பாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையே வருகை தருவதாக மக்கள் தெரிவித்தனர்.

இதனால் தமக்கு பெருந்தொகைப் பணத்தை ஒரே தடவையில் செலுத்த வேண்டி ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக கடந்த காலங்களில் ஒவ்வெரு மாதமும் தமக்கு மின் பட்டியல் கிடைப்பதாகவும், தற்போது 3 மாதத்திற்கு ஒரு தடவை வந்து மின் பட்டியல் வழங்கப்படுவதாகவும், இதனால் அதி கூடிய கட்டணப் பட்டியல் தமக்கு கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிராமங்களில் கடந்த மே மாதம் 16 ஆம் திகதி இறுதியாக மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து இம் மாதம் 14 ஆம் திகதி மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிடையில் 27-07-2017 அன்று ஒரு மின் கட்டணப் பட்டியல் தொடர்பில் மின் மானி வாசிப்பு மேற்கொண்டது போல் இறுதியாக 3 மாதங்களின் பின் வழங்கப்பட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளுக்குச் சென்று மின் மானி பார்க்காது மின் கட்டணப் பட்டியல் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிகூடிய தொகை தமக்கு மின் கட்டணமாக வந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே ஒவ்வெறு மாதமும் தமக்கான மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட வேண்டும் எனவும், குறிப்பாக வீடுகளுக்குச் சென்று மின் வாசிப்பை மேற்கொள்ளாது அலுவலகத்தில் இருந்து கொண்டு சராசரி கணிப்பீட்டின் ஊடாகப் பட்டியல் போடுவதினூடாகவே குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த செயற்பாட்டை நிறுத்தி நேரடியாக வந்து ஒவ்வொரு மாதமும் மின் கட்டணப் பட்டியலை வழங்க மன்னார் மின்சாரசபை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.