விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ் விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டது என்ன? என்று பேசினார்.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு வெளிவர இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன், நீதானே நீதானே என்ற இரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது. படக்குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விழா அரங்கில் குவிந்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மெர்சல்' படத்தின் நான்கு பாடல்கள் விழா மேடையில் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ் பேசியதாவது,

தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாகவும், விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25வது ஆண்டாகவும் அமைத்திருப்பதில் மகிழ்ச்சி. விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் இரசிகனாகவும் கலந்து கொண்டுள்ளேன்.

விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதேபோல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும்.

ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார். விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த விழாவில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு தனுஷ் பேசினார்.