இரண்டு மாத பெண் குழந்தையொன்று அடுப்பில் தவறி விழுந்த நிலையில் எரிகாயங்களுடன் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பொகவந்தலாவை குயினா கிழ்பிரிவு தோட்டத்தில் 2 மாத பெண்  குழந்தையொன்று அடுப்பில் தவறி விழுந்தாகக் கூறி பாரிய தீக் காயங்களுடன் பொகவந்தலாவை மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்டவைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த  சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, பொலிஸார் குறித்த பெண் குழந்தையின் தாயாரிடம் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை மாலை 6.15 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தனது இரண்டு மாத குழந்தை அடுப்பில் தவறி விழுந்தாக குறித்த குழந்தையின் தாய் வைத்தியருக்கு தெரிவித்த நிலையில், அதில் வைத்தியருக்கு சந்தேகம் எழவே வைத்தியரால் பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளது.

பலத்த எரி காயங்களுக்குள்ளான இரண்டு மாத  பெண் குழந்தையான அனுஷாகுமாரி மேலதிக சிகிச்சைக்காக பொகவந்தலாவை வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாய் மூன்று குழந்தைகளின் தாயெனவும் இவரின் கணவர் வெளிநாடொன்றுக்கு தொழில் நிமிர்த்தம் சென்றுஉள்ளதாகவும் வீட்டில் இரண்டு மாத குழந்தையின் தாயும் எரிகாயங்களுக்குள்ளான குழந்தையும் இரண்டுவயது குழந்தையும் வீட்டில் இருந்த வேளை சமையல் அறையில் தொங்கவிடபட்டிருந்த தொட்டிலின் அளவும் சமையல் அறையில் அமைக்கபட்டிருந்த அடுப்பும் சம அளவில் காணப்படுவதாகவும் தொங்கவிடபட்ட தொட்டிலில் சீலையொன்று சுற்றப்பட்டிருந்ததாகவும் அதிலிருந்து தொங்கவிடபட்ட தொட்டிலில் தீ பற்றியதாகவும் இதன்  மூலமாகவே குழந்தைக்கு தீக் காயங்கள் ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டபோது தெரியவந்துள்ளது.

இதேவேளை குழந்தை இருந்த தொட்டிலின் அடிப்பகுதியில் நிலத்தில் குப்பி விளக்கொன்றும்  சாய்ந்து கிடந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யபடவில்லையெனவும் குழந்தைக்கு தீயினால் சூடு வைக்கபட்டதா அல்லது நடந்தது என்ன என்பது குறித்து பொகவந்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.