சிங்கப்பூர் கடல் பிராந்தியத்தில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலொன்று, லிபியாவிற்குச் சொந்தமான சரக்குக் கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 10 அமெரிக்க கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ஜோன் மெக்கெயின் என்ற நாசகாரி போர்க்கப்பலொன்று சிங்கப்பூர் கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தது. குறித்த போர்க்கப்பல் மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதுடன் குறித்த கப்பலில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன.

சிங்கப்பூர் கடல் பகுதியில் மலாக்கா தீவுக்கு அருகில் பணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல், லிபியாவை சேர்ந்த அல்னிக் என்ற சரக்குக் கப்பலுடன் திடீரென மோதியது, இச் சம்பவத்தில் அமெரிக்க கப்பலில் இருந்த 10 கடற்படையினர் காணாமல் போயுள்ளதாக அமெரிக்க கடற்படை  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்துள்ளதாகவும் சரக்கு கப்பல் அமெரிக்க கப்பலைவிட  அதிக எடையுடன் இருந்ததால் அமெரிக்க கப்பலுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த சரக்குக் கப்பலில் 30 ஆயிரம் டொன் சரக்குகள் ஏற்றப்பட்டிருந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த கப்பல் விபத்தில், அமெரிக்க போர்க்கப்பலில் பயணம் செய்த 10 கடற்படை வீரர்கள் காணாமல்போயுள்ளதாகவும் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை ஹெலிகொப்டர் மூலம் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் மாயமான வீரர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.