தமிழ் முற்போக்கு கூட்டணி  தலைவர் மனோ கணேசனால் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான கூட்டணியின் நிபுணர் குழு நாளை மறுநாள் செவ்வாய்கிழமை முதன்முறையாக கொழும்பில் கூடுகிறது. இந்த கூட்டம் அன்றைய தினம் காலை 9மணி முதல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.        

புதிய அரசியலமைப்பு வரைபிற்கான  தமிழ் முற்போக்கு கூட்டணி நிபுணர் குழு என்ற அடிப்படையில், சமூக ஆய்வாளர் பி. முத்துலிங்கம், பேராசிரியர் எம். சின்னதம்பி, பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் டி. தனராஜ், பேராசிரியர் மூக்கையா, கலாநிதி எஸ். சந்திரபோஸ், சட்டத்தரணி கணபதிபிள்ளை, விரிவுரையாளர் எஸ். விஜயசந்திரன், விரிவுரையாளர் கௌரி பழனியப்பன், சிரேஷ்ட அரச பணியாளர் எம். வாமதேவன், ஆய்வாளர் கௌதம் பாலசந்திரன், விரிவுரையாளர் உமாதேவி துரைராஜ், வண பிதா பொன்கலன், தொழில் அதிபர் சந்திரா சாப்டர், சமூக ஆய்வாளர் ரமேஷ் நந்தகுமார், முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, அன்டன் லோரன்ஸ், சண். பிரபாகரன்  ஆகிய பதினெட்டு பேரைக்கொண்ட குழுவே கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளதாவது,

நமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழுவில் இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி தகைமை கொண்டவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இடம்பெறுகிறார்கள். இந்த குழுவின் பணி தொடர்பிலான வரையறை மற்றும் குறிப்புகள், நேற்று கௌரவ குழு அங்கத்தவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கபட்டுள்ளன. செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள முதல் நிபுணர் குழு கூட்டத்தில், கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துக்கொள்ள உள்ளனர். எனினும் இந்த பணி முழுமையாக இந்த நிபுணர் குழுவிடமேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது. உருவாகவுள்ள புதிய அரசியலமைப்பில், நமது கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் அபிலாசைகள் இடம்பெறும் வண்ணம் உரிய முன்தயாரிப்பு பணிகளை இந்த கற்றிந்த நிபுணர் குழு செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.