இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாளை மறு நாள்  இடம்பெறவுள்ளது.

இதேவேளை இலங்கை அணி எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கு நேரடியாக தகுதிபெற வேண்டுமாயின் இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகள் இரண்டில் வெற்றிபெற்றாக வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை பகலிரவுப் போட்டியாக தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்  இடம்பெறவுள்ளது.

இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணியின் ஒருநாள் குழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குழாமில் திஸர  பெரேரா, சாமர கப்புகெதர மற்றும் மிலிந்த சிறிவர்தன ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். டெஸ்ட் அணித் தலைவர் டினேஷ் சந்திமல் மற்றும் லகிரு திரிமான்னே ஆகியோர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு கிரிக்ககெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி விபரம் வருமாறு,

உபுல் தரங்க ( அணி தலைவர் ), அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், ஷாமர கப்புகெதர, மிலிந்த சிறிவர்தன, மிலிந்த புஷ்பகுமார, அகில தனஞ்சய, லக்ஷன் சந்தகன், திஸர பெரேரா, வனிந்து ஹசரங்க, லசித் மாலிங்க, துஷ்மந்த ஷமிர, விஷ்வ பெர்னான்டோ  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.