முன்னாள் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் போதி லியனகே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக கண்டி வைத்தியசாலையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தனது வீட்டுப்படியில் இருந்து கீழே விழுந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் கண்டி வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மூளையின் நரம்பொன்று வெடித்த காரணத்தால் இரண்டு தினங்கள் தொடர்ச்சியாக அவசரப்பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மரணத்தில் எதுவித சந்தேகங்கள் இல்லாத நிலையிலும் எதிர்காலத்தில் சட்டசிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க மரணப்பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

அவரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டி கடுகஸ்தோட்டையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் பொலிஸ் சிறப்புப்படையணியின் முதலாவது கட்டளைத் தளபதியாக 1983 ஆம் ஆண்டு பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.