ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் மக்கள் கூட்டத்திற்குள் வேனால் மோதி தாக்குதல் மேற்கொண்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரின் முக்கிய சுற்றுலாத் தலம் லாஸ் ராம்பலாஸ். 

இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், அந்நாட்டு மக்களும் குவிந்திருப்பது வழக்கம்.

மாலை நேரம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்ட நிலையில், திடீரென கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது. 

கண்மூடித்தனமாக மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்த வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட வேனின் சாரதியை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் 1989 ஆண்டு மொரோக்கோவில் பிறந்துள்ளதாகவும் குறித்த நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் கடற்கரையில் பிரதேசத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை தரவேற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, லாஸ் ராம்பலாஸ் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் பொதுமக்கள் எவரும் குறித்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல்தான் என்று பெலிஸார் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.