வவுனியா பொலிஸாருக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை முன்வைத்த வடக்கு, கிழக்கு ரயில் கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் மீது நேற்றைய தினம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

"பொலிஸார் ரயில் திணைக்களத்திற்கு உரித்தான கடவைக்கு சென்று ரயில் கடவை காப்பாளர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். இதனை நாம் கண்டிக்கின்றோம். எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உதவி பொலிஸ்மா அதிபராக இருந்தாலும் சரி பொலிஸ் அத்தியட்சகராக இருந்தாலும் சரி எந்த அதிகாரியானாலும் ரயில் கடவை காப்பாளர்களிடம் பொதுவான மன்னிப்பை கோர வேண்டும்" என  வடக்கு, கிழக்கு ரயில் கடவை காப்பாளர் சங்க தலைவர் றொகான் ராஜ்குமார் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.எ.மகிந்த அவர்களிடம் வினவிய போது,

தாங்கள் அவ்வாறு எதனையும் குறிப்பிடவில்லை எனவும் ரயில்  கடவை காப்பாளர் சங்க தலைவரிடம் தொலைபேசி மூலம் பேசியதாகவும் பொலிஸார் அவ்வாறு கூறியதற்கான ஆதாரங்கள் எவையும் தன்னிடம் இல்லையென தெரிவித்ததாகவும் கூறினார்.

இவ்வாறு ஆதாரங்கள் இல்லாமல் எவ்வாறு பொலிஸ் அதிகாரிகளை குறை கூற முடியும் எனவும் இவ் விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.