(லியோ நிரோஷ தர்ஷன்)

வஞ்சகப் பேச்சால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தன்னை தோல்வியடையச் செய்த மக்கள் பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்தும் செயற்படுகின்றார் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

அமைச்சர்  மங்கள சமரவீர இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியார் மயமாக்கப்பட்டதன் ஊடாக நாட்டிற்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கைவிடும் மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் தேசிய வளங்களை மீளப் பெறமுடியாதவாறு அந்நிய நாடுகளுக்கு விற்பனை செய்ததை மறந்து விட்டார். கொழும்பு துறைமுகத்தில் ஒரு பகுதியை 85 க்கு 15 என்ற வீதத்தின் அடிப்படையில் சீனாவிற்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார். 

இதே போன்றதொரு வீதத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனாவிற்கு வழங்குவதற்கு 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று செய்தார். இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் மேலும் 350 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை  சீனாவிற்கு கடனாக செலுத்தும் நிலை ஏற்பட்டிருக்கும்.

10 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்து தோல்வியடைந்து வீட்டிற்கு சென்ற முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இன, மத வாதத்திற்கு மீண்டும் நாட்டை பலிகொடுத்த நிலையிலேயே அதிகாரத்தை விட்டுச் சென்றார். 

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற  ஊழல் மோசடி விசாரணைகளின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் வசம் இருந்த சட்டவிரோதமாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 500 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் நீதிமன்றம் மற்றும் அரச உடைமைகளாக காணப்படுகின்றது. தானோ தனது குடும்பத்தினரோ ஒரு ரூபா ஏனும் திருடியிருந்தால் வயிற்றை கிழித்துக்கொள்வோம் எனக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ தற்போது அந்த உறுதிமொழியையும் மறந்து விட்டார். 

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலியான பிரசாரங்களை முன்னெடுப்பதோடு அரச சொத்துக்கள் தனியார்மயமாக்கப்படுகின்றது. தேசிய சொத்துக்கள் அந்நிய நாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது என மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவித்து வருகின்றார். விஹாரைகளில்  அரசியல் செய்து நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பாரிய துரோகத்தை மஹிந்த ராஜபக்ஷ செய்கின்றார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.