மக்களுடைய உரிமைகள்  பறிக்கப்படுகின்ற போது அவர்கள் இந்துவா, முஸ்லிமா, சிங்களமா என நாங்கள் பார்ப்பதில்லை ஒட்டுமொத்த சமூகத்துக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீ நேசன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் சில அமைப்புக்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வின் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுகிறன. அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் .அதேநேரம் சிங்கள, முஸ்லிம் மக்களின் காணிகள் தொடர்பாகவும் நாம் குரல் கொடுப்போம். 

நாங்கள் இன வாதிகள், மத வாதிகள் அல்ல நேர்மையாக பணியாற்றுகின்றோம் இன வாதத்தை மத வாதத்தை பரப்புகிறவர்கள் நல்ல மனிதர்களாக இருக்க முடியாது குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இருந்த மண்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகம் எமக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை. சத்ருக்கொண்டானில் 25 வீடுகளை கட்டுவதற்கு  அமைச்சரவையில் அனுமதி பெற்றும்  இங்குள்ளவர்கள் காணிகளை வழங்க மறுத்திருந்தனர். ஆனால் தற்போதுள்ள நிர்வாகம் மிகவும் சிறந்த முறையில் ஒத்துழைக்கின்றது.

தற்போதைய நிர்வாகம் 75 வீடுகளை அமைப்பதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றமை பெருமைக்குரிய விடயமாகும். எமக்குள் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளாமல் நாம் ஒன்று சேர்ந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.