தனது நண்பரை வார இறுதி நாட்களில் சந்திப்பதற்காக 8 மாத குழந்தையை பொலித்தீன் பையினுள் இட்டு புதருக்கடியில் விட்டுச்சென்ற தாய்க்கெதிராக நியூயோர்க் நகர நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஹரியட் ஹாயட் என்ற எட்டு மாத குழந்தையின் தாய் கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்து  நியூயோர்க் நகரிலுள்ள எல்மிராப் பகுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளம் தாய் வார இறுதி நாட்களில் தன் நண்பனை சந்திக்கச்செல்லும் வழக்கமுடையவர் என்றும் அதற்கு தன் குழந்தை தடையாக இருப்பதால் குழந்தையை பொலித்தீன் பைக்குள் இட்டு இறுக கட்டி வீட்டுத் தோட்டத்திலுள்ள புதருக்கடியில் விட்டுச்சென்றுள்ளார்.

இவ்வாறு புதருக்கடியில் விடப்பட்டிருந்த குழந்தையை அயல் வீட்டில் வசித்துவரும் கய்லா மற்றும் கரென் சீல்ஸ் சகோதரிகள் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தையின் உடலில் புழுக்கள் ஊர்ந்துகொண்டிருந்ததாகவும், சூரிய ஒளி வெப்பத்தால் குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தாகவும், பொலித்தீன் பைக்குள் கட்டப்பட்டிருந்தமையால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருந்ததாகவும் உடனடியாக குறித்த சகோதரிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து விட்டு குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்கை அளித்துள்ளனர்.

சகோதரிகள் வழங்கிய தகவலுக்கமைய குழந்தையின் தாயை பொலிஸார் கைது செய்து அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்குத் தொடர்பாக பிரபல வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண்ணிற்கு எது வித சட்ட உதவிகளும் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.