நாட்டில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வுகாணும் முகமாக பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கென தனியானதொரு சாலை வேலைத்திட்டத்திற்கான ஒத்திகை எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கான தனியானதொரு சாலை திட்டம் கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பொரள்ளை சந்தியிலிருந்து ராஜகிரிய வரையில் ஒத்திகை பார்க்கப்பட்டு, அதில் வெற்றிகண்டதன் பின்னரே இத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த  பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் மொரட்டுவ குருசு சந்தியிலிருந்து கட்டுபெத்த வரையிலும், சவோய் திரையரங்கிலிருந்து பம்பலப்பிட்டி சந்தி வரையிலும், 22 ஆம் திகதி தொடக்கம் கட்டுபெத்த சந்தியிலிருந்து மெலிபன் சந்தி வரையிலும், பம்பலப்பிட்டி சந்தியிலிருந்து பித்தளைச் சந்தி வரையிலும், 29 ஆம் திகதி தொடக்கம் பத்தரமுல்லை பொல்துவ சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்தி வரையிலும், நகர மண்டப சந்தியிலிருந்து தும்முல்லை சந்தி வரையிலும், செப்பெடம்பர் 5 ஆம் திகதி தொடக்கம் மருதானை டெக்னிகல் சந்தியிலிருந்து புறக்கோட்டை வரையிலும், 12 ஆம் திகதியிலிருந்து கொம்பனித்தெரு சந்தியிலிருந்து புற்க்கோட்டை வரையிலும்,  நவம்பர் 30 ஆம் திகதியிலிருந்து பொரள்ளை சந்தியிலிருந்து மருதானை வரையில் குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. 

குறித்தொதுக்கப்பட்ட தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இப் பகுதிகளில் பொதுப்போக்குவரத்து வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட சாலைகளில் ஏனைய வாகனங்கள் செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த போக்குவரத்து திட்டத்தை சாரதிகள் சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை ஜி.பி.எஸ். தொழில்நுட்ப முயையினூடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.