ஜாகிங் சென்ற நபரொருவர் அவ்வழியே வந்த பெண்ணை பஸ்ஸின் முன்பு தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சி வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள புட்னி பாலத்தில் நபர் ஒருவர் ஜாகிங் சென்று கொண்டிருந்த போது, குறித்த பாலத்தில் நடந்து வந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை அவர் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

இதில் அப்பெண் அதிர்ஷ்டவசமாக எதிரே வந்த பஸ்ஸின் சக்கரத்தில் சிக்காமல் உயிர்தப்பினார். இச்சம்பவம் கடந்த மே மாதம் 5 ஆம் திகதி நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான சிசிரிவி காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன், இது குறித்து கடந்த செவ்வாய் கிழமை சந்தேகத்தின் அடிப்படையில் 50 வயது மதிக்கத்தக்க செல்ஸியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த சம்பவத்தில் அப்பெண்ணை தள்ளிவிட்ட நபர், தள்ளிவிட்ட சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அப்பாலத்தின் வழியே வந்துள்ளார்.அவ்வேளையில் அப்பெண் அவரிடம் பேச முயற்சித்த போதும், குறித்த நபர் எந்த ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டதாகவும், பஸ்ஸின் சாரதியின் சாமர்த்தியத்தால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.