வெளியாகியது புதிய தகவல் : சி.ஐ.டி.யால் வெளிப்படுத்தப்பட்டது திருமலை நிலத்தடி சிறையிலிருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பு பதிவுகள் 

Published By: Priyatharshan

11 Aug, 2017 | 06:15 AM
image

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு  5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவின் கீழ் சிகிச்சைப்பெற்றுவரும் கடற்படை முன்னாள் ஊடகப்பேச்சாளர் டி.கெ.பி. தஸநாயக்கவுக்கு பிணை வழங்க முடியாது என கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று அறிவித்தார். 

தஸநாயக்க சார்பில் கடந்த தவணையில் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல பிணை கோரல் தொடர்பில் தீர்ப்பறிவித்தே நீதிவான் இந்த அறிவித்தலை விடுத்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவின் வாதங்களை கருத்தில்கொண்டு, தற்போது வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் தஸநாயக்கவின் உடல் நிலைமையை பரிசோதித்து, அவரால் மன்றில் ஆஜராக முடியாத அளவில் சுகயீனமாக உள்ளாரா என்பதை சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை ஊடாக உறுதிப்படுத்தவும் நீதிவான் உத்தர்விட்டார்.

இதனைவிட கடத்தப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் திருகோணமலை கன்சைட் எனப்படும் இரகசிய சிறைக்கூடங்களில் இருந்து எடுக்கப்பட்ட பல தொலைபேசி அழைப்புக்களின் பதிவுகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில் அந்த தொலைபேசி அழைப்புப் பதிவுகளை மையப்படுத்தி சிறப்பு விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பில் விசாரணை செய்யும் பிரதான விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோட்டை நீதிவானுக்கு அறிக்கை ஊடாக அறிவித்துள்ளார்.

இந் நிலையில் இந்த கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 7 பேரில் விளக்கமறியலில் இருந்துவரும் அறுவரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை கோட்டை நீதிமன்றம் நீடித்தது.

அத்துடன் கைது செய்வதற்காக தேடப்பட்டுவரும் கடற்படை லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆரச்சியைக் கைது செய்ய பிடியாணையை நீடித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு  5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க அஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் கடற்படை தளபதி, வசந்த கரண்ணாகொட தனது பாதுகாப்பு உத்தியோகத்தராக இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்கவுக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்த மேலதிக விசாரணைகளிலேயே இந்த கடத்தல் விவகாரம் அம்பலத்துக்கு வந்ததிருந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்னவின் ஆலோசனைக்கு அமைய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்லவின் வழிகாட்டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி  கட்டுப்பாட்டில் புலனாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தலைமையில் முன்னெடுக்கப்படும் இருவேறு விசாரணைகளில் இந்த பிரதான கடத்தல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, வத்தளை மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களில் பல்வேறு உத்திகளை கையாண்டு இந்த கடத்தல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக தெஹிவளையில் 2008.09.17 அன்று பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்பவரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஸ்வரன் ராமலிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்களும் கடத்தப்பட்டிருந்தனர். இதனைவிட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையை சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆராச்சி, திருகோணமலையை சேர்ந்த தியாகராஜா கஜன் உள்ளிட்டோரும் கடத்தப்பட்டிருந்தனர். 

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும்  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப்புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார,  நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கெ.பி. தஸநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களில் சம்பத் முனசிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.

 நேற்றைய விசாரணைகள் ஆரம்பமான போது சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்த நிலையில்  7 ஆவது சந்தேக நபரான டி.கே.பி. தசநாயக்க மட்டும் மன்றில் ஆஜராகி இருக்கவில்லை.  அவர் வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெறுவதாக இதன்போது சிறை அதிகாரிகளால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 

தஸநாயக்கவுக்கு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதனை முன்னெடுக்கவுள்ள வைத்தியர் வெளிநாட்டில் உள்ளதால் அவர் வருகை தந்ததும் அந்த சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்படும் எனவும் அந்த வைத்திய அறிக்கை ஊடாக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று நீதிமன்றில் ஆஜரான குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர்களான நிசாந்த சில்வா, பத்மசிறி இலங்கசிங்க ஆகியோர் நீதிவானுக்கு சிறப்பு மேலதிக அறிக்கை ஒன்றினை சமர்பித்தனர்.  அத்துடன் கன்சைட் இரகசிய சித்திரவதைக் கூடத்தின்  புகைப்படங்கள் பலவற்ரையும் அவர்கள் மன்றில் சமர்ப்பித்தனர். இதனைவிட திருமலை கன்சைட் எனப்படும் குரித்த முகாமில் இருந்து எடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள், அவர்கள் யார் யாரை தொடர்பு கொன்டார்கள் உள்ளிட்ட தகவல்களை குற்றப் புலனயவுப் பிரிவினர் பெற்று ஆராய்ந்து வருவதாகவும் கடத்தப்பட்ட உறவினர்களிடம் கப்பம் கோரப்பட்டமை தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை ஊடாக நீதிவானுக்கு குற்றப் புலனயவுப் பிரிவினர் அறிவித்தனர்.

இதனைவிட  சந்தேக நபர்களின் சட்டத்தரணிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து கருத்துரைத்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, கடற்படை அதிகாரி வெலகெதர என்பவரின் சாட்சியம் ஊடாக கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். 

காமினி, மென்டிஸ் எனும் கடற்படை  வீரர்கள் கன்சைட் முகாமில் இருந்து சடலங்கள் என நம்பப்படும் பொலித்தீனால் சுற்றப்பட்ட பொதிகளை கெப் ஒன்றில் ஏற்றியதை கண்டதாக வெல்கெதர கூறியதாகவும் அது தொடர்பில் காமினி, மென்டிஸிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்படுவர் என நிசாந்த சில்வா தெரிவித்தார்.

இதனைவிட இந்த விடயத்தை வெலகெதர அப்போது அவரின் உயர் அதிகாரியான ரியர் அட்மிரல் ஆனந்த குறுகேகுவுக்கு கூறியுள்ளதாகவும் அவரும் இது தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டி ஏற்படும் இடத்து அவரும் கைது செய்யப்படுவார் எனவும் நிசாந்த சில்வா இதன்போது குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக, தசநாயக்கவின் பிணைக் கோரிக்கை மீது தீர்ப்பளித்த நீதிவான், கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் சின்னையா, கடற்படை வீரர் அசோக் மகேஸ், ஆகியோரின் வாக்குமூலம் ஊடாக தசநாயக்க  இந்த கடத்தல்கள் தொடர்பில் அறிந்திருந்தார் எனும் சாதாரண சந்தேகம் எழுவதால் அவருக்கு பிணை அளிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் 2 முதல் 7 வரையிலான சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் லங்கா ஜயரத்ன அன்றைய தினம் வழக்கை மீள விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50