இலங்கையின் மூன்று தசாப்தகால போர் காரணமாக கணவரை இழந்த  பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படுவதாக தொம்சன் ராய்டர் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. 

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட போர் விதவைகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ள போதிலும் 2011 ஆம் ஆண்டில் 300 பேர் வரையில் மாத்திரமே பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

போர் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ளது. நீண்ட போரினால் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்தும் சுமார் 65 ஆயிரம் பேர் வரையில் காணால் போயும் உள்ளனர். மேலும் பல இலட்சமட போர் வீடுவாசல்களை இழந்துள்ளனர். 

எனவே தான் அரசாங்கம் கூடிய முதலீடுகளை வடக்கிற்கு கொண்டு செல்கின்றது. சுமார் 90 ஆயிரம் பேர் வரையில் கணவர்களை இழந்த விதவை பெண்களாக வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்றனர். 

இந்நிலையில் மத்திய கிழக்கிற்கு தொழில் நிமித்தம் செல்லும் ஆசிய மற்றும் ஆபிரிக்க பெண்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளவதாக வெளியாகின்றது. இலங்கை போரில் பாதிக்கப்பட்டு பெண் தலைமைத்துவங்களை கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்போது அடிமைகளாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.  

2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வடக்கைச் சேர்ந்த பெண் குடும்பத் தலைவிகள் பலர் இவ்வாறு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் . கடந்த காலங்களில் வீட்டுப் பணிப் பெண்களாக வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது மிகவும் அரிதாகவே காணப்பட்டது.

எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், குடும்ப சுமையை ஈடு செய்ய முடியாத பெண் குடும்பத் தலைவிகள் இவ்வாறு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.