கணவனால் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொளுத்தப்பட்ட மனைவியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 25 தினங்களுக்குப்பின் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

மொனராகலை பிரக்தி மாவத்தையைச் சேர்ந்த கே.எம்.சுஜாதா எனும் 50 வயது நிரம்பிய பெண்ணே குறித்த சம்பவத்தினால் சிகிச்சை பலனளிக்காது இன்று காலை உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 5 ஆம் திகதி கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஏற்பட்ட குடும்பச்சண்டை காரணமாக ஆத்திரமடைந்த கணவன் மனைவி மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

தீ பற்றியதால் குறித்த பெண் எழுப்பிய அலக்கூரலைக் கேட்ட அயலவர்கள் அப் பெண்ணை மீட்டு மொனராகலை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், பலத்த தீக்காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைத்து கடந்த 25 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார்.  இருந்த போதிலும் குறித்த பெண் சிகிச்சை பலனளிக்காது இன்று காலை உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மொனராகலை பொலிஸார் பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.