ஊடகங்களுக்கும் எனக்கும் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது. எனது அரசியல் பணிகளுக்கு தனிப்பட்ட முறையில் சேறு பூச முற்பட்டமையினாலேயே நான் அவ்வாறு நடந்து கொள்ள நேரிட்டது. தனிப்பட்ட முறையில் ஊடகங்களை தாக்குவதில் எனக்கும் உடன்பாடு கிடையாது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேசிய தாய்ப்பால் வாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் பேரணி மற்றும் செயலமர்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. அதனை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வின் போது அமைச்சர் திகாம்பரம் உரையாற்றுவற்கு சற்று நேரத்திற்கு முன் அவரின் ஊடக செயலாளரினால் தனியார் தொலைக்காட்சியொன்றின் ஒலிவாங்கி அகற்றப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

அதற்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் அமைந்துள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.