‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் ரஜினியின் காலா மற்றும் விஜய்யின் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெப்சி தொழிலாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். பெப்சி தொழிலாளர்கள் வராவிட்டாலும், வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்துவோம் என்று படதயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

தற்போது 50க்கும் மேற்பட்ட புதிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சுமார் 35 படங்களுக்கான படப்பிடிப்பு நடந்து வந்தது. பெப்சி தொழிலாளர்கள் வராவிட்டால் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.

வேலை நிறுத்தத்தில் ஒளிப்பதிவாளர்கள், நடன கலைஞர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துவிட்டனர். இயக்குனர்கள் சங்க தேர்தல் முடிந்து பதவி ஏற்பு நடைபெறாததால் அவர்களும் வேலைநிறுத்தம் பற்றி எந்த முடியும் எடுக்கவில்லை.

இன்று பெரும்பாலான படப்பிடிப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, இந்த சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று காலை படப்பிடிப்புக்கு வந்தனர்.

ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில், மும்பை தாராவி பகுதி போன்று அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கத்தில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான பெப்சி தொழிலாளர்களும் பணிபுரிந்து வந்தனர். இன்று காலை அவர்கள் வேலைக்கு வராததால் ‘காலா’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படப்பிடிப்பும் சென்னையில் நடந்து வந்தது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஒருசில காட்சிகள் இன்று படமாக்கப்பட இருந்தன. பெப்சி தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் இந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு சிதம்பரம் அருகே நடந்து வருகிறது. இன்றும் இதன் படப்பிடிப்பு தடையின்றி நடந்தது.

என்றாலும் சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் படப்பிடிப்புகளில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் படப்பிடிப்பு தடையின்றி நடைபெற்றன. தேவைப்படும் தொழிலாளர்களை தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் இருந்து அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இன்று காலை நடைபெற்ற படப்பிடிப்புகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதுபற்றி தயாரிப்பாளர்கள் தரப்பில் கேட்ட போது, ‘‘மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெப்சி வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்பில் எந்தவித தடையும் ஏற்படாது’’ என்று தெரிவித்தனர்.