பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலித் மஹ்மூத் கோமாவால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோமாவால் பாதிக்கப்பட்ட காலித் மஹ்மூத்தை, மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலித் மஹ்மூத்தின் குடும்ப உறுப்பினர் ஒருவர்  அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலித் மஹ்மூத்,  கடந்த புதன்கிழமை தனது 46 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியிருந்தார். இந்நிலையில், அவருக்கு  கடந்த ஞாயிற்றுக்கிழமை கோமாநிலையேற்பட்டதையடுத்து டாக்காவிலுள்ள வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

பங்களாதேஷ் அணியின் சகலதுறையாட்டக்காரராக திகழ்ந்த காலித் மஹ்மூத், தற்போது பங்களாதேஷ் அணியின் முகாமையாளராகவும் சபையின் பணிப்பாளராகவும் கடமையாற்றிவருகிறார். கடந்த  2003 ஆம் ஆண்டுகளில் பங்களாதேஷ் அணியை வழிநடத்திய 3 ஆவது டெஸ்ட் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்காக காலித் மஹ்மூத்  12 டெஸ்ட் போட்டிகளிலும் 77 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளதுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 2006 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றமை குறிப்பிடத்தக்கது.