முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன் னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, பாகிஸ்தான் தூதுவரை கொலை செய்ய முயன்றமை மற்றும் கருணா உள்ளிட்ட குழுவினரை கொலை செய்ய முற்பட்டமை ஆகிய விவகாரங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சட்ட மா அதிபரின் ஆலோ சனையைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு இந்த வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த மூன்று விவகாரங்கள் குறித்தான வழக்கும் நேற்றையதினம் அரசியல் கைதிகள் விவகாரங்களை விசாரிக்க புதிதாக ஏற்படுத்தப்பட்ட விசேட நீதி மன்றில் நீதிபதி ஐராங்கனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜ பக் ஷ மற்றும் சரத் பொன்சேகா கொலை சதி முயற்சி வழக்கில் இரு பிரதிவாதிகளும் பாகிஸ்தான் தூதுவர் கொலை முயற்சி விவகாரத்தில் 3 பிரதிவாதிகளும் கருணா குழுவினர் கொலை முயற்சி வழக்கில் இரு பிரதிவாதிகளும் சட்ட மா அதிபரால் பெயரிடப்பட்டி ருந்த நிலையில் அவை தொடர்பில் வெவ்வேறாக விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவரா சாவின் தலைமையில் சட்டத்தரணிகளான நளினி மற்றும் துஷ்யந்தன் ஆகியோர் மன்றில் ஆஜராகி யிருந்தனர். சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நிஸாந்த மெண்டிஸ் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜ பக் ஷ மற்றும் சரத் பொன்சேகா கொலை சதி முயற்சி மற்றும் பாகிஸ்தான் தூதுவர் கொலை முயற்சி வழக்குகளில் ஒரே சந்தேகநபர்களின் பெயர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று மன்றில் வாதப் பிரதிவாதங்கள் முன் வைக் கப்பட்டன.

குறிப்பாக மஹிந்த ராஜபக் ஷ, கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் சரத் பொன்சேகா கொலை சதி முயற்சி வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஆதித்தியன் என்ற சந்தேக நபர் பாகிஸ்தான் தூதுவர் கொலை முயற்சி வழக்கிலும் சந்தேகநபராக பெயரி டப்பட்டுள்ளார். குறித்த அரசியல் கைது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இவ்வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அத்துடன் குறித்த சந்தேகநபருக்கு எதிராக மொத்தமாக மூன்று வழக்குகள் அரச தரப்பால் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அதில் ஒன்று யாழ்.மேல் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு நிறை வுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கில் பிரதிவாதி வழங்கியதாக கூறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை நீதிமன்றம் நிராகரித்து அவரை அவ் வழக்கில் இருந்து விடுதலைச் செய்துள்ளதாகவும் சட் டத்தரணி கே.வி. தவராசா சுட்டிக்காட்டினார்.

அதன் மூல ஆவணத்தை விரைவில் மன்றுக்கு சமர்ப்பிப்பதாக கூறிய அவர், மேல் நீதிமன்றம் ஒன்று நிராகரித்த அதே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட் டும் அடிப்படையாகக் கொண்டே மஹிந்த, கோத்தா, சரத் பொன்சேகா கொலை முயற்சி மற்றும் பாகிஸ்தான் தூதுவர் கொலை முயற்சி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த வழக்குகள் தொடர்பில் வேறு ஆதாரங்கள் இல்லாத நிலையில் இவ்வழக்குகளில் இருந்தும் பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள் என சிரேஷ்ட சட்டத் தரணி கே.வி.தவராசா வாதிட்டார்.

இதன்போது நீதிபதி ஐராங்கனி பெரேரா, இது குறித்து அரச சட்டவாதி மெண்டிஸிடம் விளக்கம் கோரினார். இதற்குப் பதிலளித்த அரச சட்டவாதி, பிரதிவாதி சட்டத்தரணியிடம் இருந்து ஆவணங்க ளைப் பெற்று இதுதொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதாக உறுதிய ளித்தார். இதனையடுத்து சட்ட மா அதிபரின் தீர்மா னத்தை இரு வாரங்களுக்குள் மன்றுக்கு அறிவிக்க உத்தரவிட்ட நீதிவான் ஐராங்கனி பெரேரா குறித்த இரு வழக்குகளையும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

இதேவேளை கருணா குழு கொலை முயற்சி தொடர்பிலான வழக்கிலும் வவுனியா மேல் நீதி மன்றினால் நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே பிரதான சாட்சியாக அரச தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் அந்த வழக்கு குறித்தும் பிரதிவாதிகள் விடுதலை செய்யப் படல் வேண்டும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சுட்டிக்காட்டினார். எனினும் இது தொடர்பில் தற்போதும் சட்ட மா அதிபர் அவதா னம் செலுத்தியுள்ளதாக அரச சட்டவாதி இதற்கு பதிலளித்த நிலையில் அது குறித்தும் உறுதியான தீர்மானத்தை எதிர்வரும் இரு வாரங்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதி ஐராங்கனி பெரேரா அந்த வழக்கையும் பெப்ர வரி மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தமை குறிப்பி டத்தக்கது.

இந்த வழக்கு விசாரணைகளைத் தொடர்ந்து கேசரிக்கு கருத்து தெரிவித்த சிரேஷ்ட சட்டவாதி கே.வி.தவராசா, சட்ட மா அதிபர் சார்பில் சிறைச்சாலைகளில் வைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படாமையே அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். கைதிகளை சிறை யில் பார்வையிட்ட சொலிசிஸ்டர் ஜெனரல் சுகந்த கம்லத், நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் ஊடாக பிறிதொரு வழக்கில் பிரதிவாதி களாக கொள்ளப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதாக உறுதியளித்த போதும் இன்றுவரை அது நடைபெற வில்லை எனவும் மாற்றமாக அவ்வாறான கைதிகளின் குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட் டிக்காட்டினார்.