“அரு­வமும் உரு­வு­மாகி அநா­தியாய்ப் பலவாய் ஒன்றாய்  பிர­மமாய்  நின்ற  ஜோதிப்  பிழம்­பதோர்  மேனி­யாகி கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்­னி­ ரெண்டும்  கொண்டே ஒரு திரு முருகன்  வந்­தாங்கு உதித்­தனன் உல­க­முய்ய” 

முருகப் பெருமான் ஈழ­ம­ணித்­தி­ரு­நாட்டின்  பல்­வேறு இடங்­களில் கோயில் கொண்­டெ­ழுந்­த­ருளி அருள்­மழை  பொழிந்து வரு­கின்றார். முருகப் பெருமான் ஆல­யங்­களுள் முதன்மை பெற்றுத் திகழும்  நல்லைக் கந்தன் ஆலயம்  அமைந்­தி­ருக்கும்  நல்­லை­யம்­பதி வர­லாற்றுச் சிறப்பும், ஆன்­மீகச் சிறப்பும்  உடை­யது.  நல்­லை­யம்­பதி  என்னும்  அழ­கிய  திருப்­ப­தி­யிலே அருட்­கோல நாய­க­னாக  வீற்­றி­ருந்து அகி­ல­மெல்லாம் அருள் சுமந்து  கொண்­டி­ருப்­பவர் நல்­லைக்­கந்தன், அலங்­காரக்  கந்தன் என அனை­வ­ராலும் அழைக்­கப்­படும் அழகுக் கோலம் நல்லைக் கந்­தனின்  சிறப்­பாகும். முத்­த­மிழால்  வைய­கத்­தா­ரையும்  வாழ வைக்கும் முரு­கப்­பெ­ருமான் அருட்­சக்­தி­க­ளான  தெய்­வ­யா­னை­யம்­மையும்,  வள்­ளி­யம்­மையும் அருகே  வீற்­றி­ருக்க ஷண்­முகப் பெரு­மா­னாக வீற்­றி­ருந்து அரு­ளாட்சி புரி­கின்றார். அழகன் முருகன்  அலங்­காரக் கந்­த­னாக  வீற்­றி­ருக்கும் அற்­புதத் திருத்­தலம்  நல்லூர். முருகன் என்றால் அழகு என்று பொரு­ளாகும். முருகப் பெருமான் என்றும் அழ­குடன்  திகழ்­வதால்   “கந்தன்”  என்றும் இள­மை­யுடன்  திகழ்­வதால், “குமரன்” என்றும்  அழைக்­கப்­ப­டு­கின்றான்.  அழகன்  முருகன்  நல்­லை­யம்­ப­தியில் வீற்­றி­ருந்து எல்­லோ­ரையும் வாழ வைக்­கின்றான். உல­க­மெல்லாம் பரந்து வாழும்  சைவ நன் மக்கள் எல்­லாரும்  கரங்­கு­வித்து, வரம்­வேண்டி  நிற்கும் அற்­பு­த­மான தெய்வம்  நல்லூர்க் கந்தப் பெரு­மா­னாகும்.  சங்­க­போதி  புவ­னேக பாகுவால் கட்­டப்­பட்ட  நல்லூர்க் கந்­த­சாமி  கோயில் யாழ்ப்­பா­ணத்தில்  ஓர் அருள்­மிக்க  அற்­புத  ஆல­ய­மாகக் காட்­சி­ய­ளிக்­கின்­றது. கருணைக்  கட­லாக  வீற்­றி­ருந்து அருள் மழை  பொழியும்  நல்­லூர்க்­கந்­தனை வழி­படும்  அடி­யார்­க­ளு­டைய  துன்ப துய­ரங்கள் இன்­னல்கள் எல்லாம்  சூரி­யனைக் கண்ட பனி­போல  வில­கு­கின்­றது என்­பது  அடி­யார்­க­ளு­டைய நம்­பிக்­கை­யாகும். உதய சூரி­யனின் வெண்பொற் கதிர்கள் முருகப் பெரு­மானின் அழ­கிய கோபு­ரங்­களின் மீது படர்ந்து ‘பளிச்’  என ஒளி வீச  மணிக்­கோ­பு­ரத்தின் மணி­யோசை ஆல­யத்தின்  நாலா பக்­கத்­திலும் ஒலிக்க அடி­யார்­களைத் தன்­வ­சப்­ப­டுத்தி அரு­ளாட்சி  செய்­கின்றார் கந்தப் பெருமான். “ஒம் முருகா” என்ற அருட்­கோ­புரம்  பல்­லா­யிரக்  கணக்­கான  அடி­யார்­களை வர­வேற்­கின்­றது. ஆறு­முகப் பெருமான் அடி­ய­வர்கள்  வருந்­தி­ய­ழைக்கும் போதெல்லாம் வேலோடும், மயி­லோடும்  தோன்றி அருள் புரிவான். “சுற்றி  நில்­லாதே பகையே துள்­ளி­வ­ரு­குது வேல்” என்ற கருத்­துக்கு  இன்றும்  தனிப்­பெ­ருந்­தெய்­வ­மாக  நிற்­கின்றான்  முருகப் பெருமான். நல்­லூரில்  இருந்து  ஒலிக்கும்  மணி­யோசை  இந்து மக்கள் எல்­லோ­ருக்கும் குறிப்­பாக யாழ்.குடா  நாட்டு மக்கள் அனை­வ­ருக்கும்  எந்­நே­ரமும்  இறை­சிந்­த­னையைத்  தோற்­று­விக்­கின்­றது. அடி­யார்கள் முரு­கப்­பெ­ரு­மானை  நினைந்து  “காத­லாகிக் கசிந்து” கண்ணீர்  மல்கி துதிக்­கின்­றார்கள். 

“வீரவேல் தாரைவேல் விண்ணோர்  சிறை­மீட்ட தீரவேல் செவ்வேல்  திருக்­கைவேல் வாரி குளித்­தவேல் கொற்­றவேல் சூர்­மார்பும்  குன்றும் துளைத்­தவேல் உண்டே துணை” 

இப்­பா­ட­லிலி­ருந்து   வேலின்  பெரு­மை­களை  அறிந்து கொள்­ளலாம். வேலின் பெருமை எத்­த­கை­யது என்­ப­தையும்  அடி­யார்கள் உணர்ந்து  கொள்­ளலாம்.  நல்­லை­யம்­ப­தியில்  வீற்­றி­ருந்து   அருள்­பா­லிக்கும் கலி­யுக வர­தனாம் முருகப் பெருமான் ஆல­யத்தில்  மூலஸ்­தா­னத்தில் இருப்­பது  வெற்­றி­வே­லாகும். இந்த வேல்  ஒரு தனிச்­சி­றப்பு வாய்ந்­தது.  இந்த வேலுக்குத் தெய்­வீ­க­மான ஈர்ப்­புச்­சக்தி உண்டு.  இத­னால்த்தான் அடி­யார்கள் வெள்ளம்  நல்­லை­யம்­ப­தியில்  கரை­பு­ரண்டு ஓடு­கின்­றது. உற்­சவ காலங்­களில்  மட்­டு­மல்­லாது நாள்­தோறும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான அடி­யார்கள் முரு­கனைப் பாடிப், பரவி, பணிந்து வழி­ப­டு­கின்­றனர். வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க  இவ்­வா­ல­யத்தின் சிறப்­புகள் அற்­பு­த­மா­னது. தமிழ் மன்­னர்­களின் ஆட்­சிக்­கா­லத்தில் இக்­கோயில்  பெருங்­கோ­யி­லாக விளங்கி வந்­தி­ருக்­கின்­றது. சங்­கிலி மன்னன் நல்­லூரை  இரா­ச­தா­னி­யாகக் கொண்டு  ஆட்சி செய்­தி­ருக்­கின்றான். அந்­நியர் வரு­கையால் இக்­கோயில்  பாதிப்­ப­டைந்து  பின்னர் பெருங்­கோ­யி­லாகக் கட்­டப்­பட்­ட­தாக வர­லா­றுகள்  கூறு­கின்­றன. இக்­கோ­யிலைக் கட்­டி­ய­வ­னாக சரித்­திர  வர­லா­று­களில்  குறிப்­பி­டப்­பட்­டுள்­ளவன் “புவ­னே­க­பாகு” என்­ப­வ­னாவான். பர­ரா­ஜ­சே­கரன், செக­ரா­ஜ­சே­கரன்  என்னும்  அர­சர்­களும் ஆட்சி புரிந்­துள்­ளனர். இவற்றைப் பார்க்கும் போது இவ்­வா­லயம் மிகவும் தொன்மை  வாய்ந்­தது என்­ப­தனைச் சரித்­திர வர­லா­றுகள் நிரூ­பிக்­கின்­றன.  

நல்லூர்  கந்­த­சாமி  கோயிலின்  அமைப்பு  மிகவும்  அழ­கா­னது. பிர­தான  கோயில் கிழக்கு  வாயிலைக்  கொண்­டுள்­ளது. கோயிலின்  உள்­வீ­தியைச் சுற்றி  உயர்ந்த மதில் கட்­டப்­பட்­டுள்­ளது. தேரோடும்  அழ­கிய  வீதி நாற்­பு­றமும்  உண்டு.  சிறந்த  சிற்ப  வேலைப்­பா­ட­மைந்த  அழ­கிய  ஐந்­த­டுக்­குக்­கோ­பு­ரமும்  அதன் இரு மருங்­கிலும்  அழ­கிய  மணிக்­கோ­பு­ரங்­களும் கீழை வாயிலை  அலங்­க­ரிக்­கின்­றன. கந்தன் திரு­வி­ளை­யா­டல்கள் சிற்ப வடிவில் அமைந்து காணப்­ப­டு­கின்­றன. வான­ளா­விய கோபுர உச்­சியில் திரு­விழாக்  காலங்­களில் சேவற்­கொடி பட்­டொளி  வீசிப்­ப­றக்கும். இவ்­வ­ழ­கிய  கோபு­ரத்­திலே அமைந்­துள்ள மணிக்­கூடு கால்­ம­ணிக்­கொரு தடவை அடித்து  காலத்தின் அரு­மையை  நினை­வூட்டும். கீழைக் கோபுர வாசலின்  உச்­சியில் “ஓம்” என்ற எழுத்தின் நடுவில்  வேலின் வடி­வமும், அதன் கீழ் “முருகா” என்ற எழுத்தும் பகலில்  மாத்­தி­ர­மன்றி இர­விலும் நன்கு தெரியக் கூடிய வகையில்  அமைக்­கப்­பட்­டுள்­ளது.  உட்­பி­ர­கா­ரத்தில் கீழைக்­கோ­புர வாசல் வழி­யாக  உள்ளே  செல்லும் போது மண்­டப வாயிலில்  “சிவ சிவ” என்ற  எழுத்­துக்கள்  யாவ­ருக்கும்  புலப்­ப­டக்­கூ­டி­ய­தாகத் தென்­ப­டு­கி­றது. கரு­வ­றை­யிலே கந்­தனின்  கைவேல் நிறு­வப்­பட்­டுள்­ளது. 

நல்லூர்க்  கந்­த­னு­டைய  ஏவி­ளம்பி வருட மகோற்­சவம் வெகு சிறப்­பாக  இன்று (28.07.2017) வெள்­ளிக்­கி­ழமை கொடி­யேற்ற விழா­வுடன்  ஆரம்­ப­மா­கின்­றது. ஆடி­மாதம் பிறந்­து­விட்டால்  அகி­ல­மெல்லாம் முரு­கனின்  பேரொளி   வீசத் தொடங்­கி­விடும். நல்­லூர்க்­கந்தன்  ஆல­யத்தில் கொடி­யே­றி­விட்டால் நாடே புனிதம்  பெற்­று­விடும். விரத அனுட்­டா­னங்­க­ளு­டனும், பய­பக்­தி­யு­டனும்  பக்தர் கூட்டம்  நல்­லூரை  நாடி­வரும். ஆடி அமா­வாசை  தினத்­தி­லி­ருந்து  ஆறாம் நாள்  கொடி­யேற்­றத்­துடன்  வரு­டாந்த  உற்­சவம்  ஆரம்­பித்து, இரு­பத்து நான்காம் நாள் தேர் உற்­ச­வமும், இரு­பத்­தைந்தாம் நாள்  தீர்த்­தோற்­ச­வமும்  நடை­பெற்று  மறுநாள் பூங்­கா­வ­னத்­துடன் முடி­வ­டை­கின்­றது. 

கொடி­யேற்றம், மஞ்­சத்­தி­ரு­விழா, கார்த்­திகை உற்­சவம், சந்­தான  கோபாலர்  உற்­சவம், கைலா­ச­வா­கன உற்­சவம், கஜ­வல்லி,  மகா­வல்லி உற்­சவம், வேல் உற்­சவம்  தெண்­டா­யு­த­பாணி உற்­சவம், சப்­பறம், தேர், தீர்த்தம் போன்ற  சிறப்­பான  உற்­ச­வங்கள் நடை­பெ­று­கின்­றன. இவ் உற்­ச­வங்கள் அடி­யார்­களின்  மனதைப் பர­வ­சப்­ப­டுத்தி, முருகப் பெரு­மானின்  சிறப்­பு­களை  அடி­யார்கள் உணர்ந்து கொள்ளக் கூடி­ய­தாக அமை­கின்­றன. 

திரு­விழா  நாட்கள் தோறும்  விடி­யற்­கா­லை­யி­லி­ருந்தே நான்கு  திசை­க­ளி­லி­ருந்தும் பக்­தர்கள் நல்­லூர்க் ­கந்தன் ஆல­யத்தை  நோக்கி வந்து சேரு­வார்கள். அடி­யார்கள் பலர் நேர்த்திக் கடன்­களை  நிறை­வேற்றும்  பொருட்டு விடி­யற்­கா­லை­யி­லேயே  வெளி­வீதி எங்­கணும் அங்­கப்­பி­ர­தட்­சணம்  செய்து முரு­கனை வழி­ப­டு­வார்கள். பஜனைக் கோஷ்­டிகள் ஒரு­புறம், காவடிகள் எடுப் போர் ஒரு­புறம், தூக்குக் காவடி எடுப்போர் ஒரு­புறம், கற்­பூரச் சட்­டிகள் ஏந்தும் பெண் கள் ஒரு­புறம்,  அங்கப் பிர­தட்­ச­ணம்­ செய் யும் அடி­யார்கள் ஒரு­புறம், விழுந்து விழுந்து கும்­பிட்டுக் கொண்டே வழி­படும் பெண்கள் ஒரு­புறம். இப்­ப­டி­யாக  அடி­யார்கள்  பக்திக் கோலத்­துடன்  முருகப் பெரு­மானை வழி­படும்  காட்­சிகள் எல்லாம் உள்­ளத்தைத் தொட­வல்­லது,  மெய்­சி­லிர்க்க  வைப்­ப­தாகும். 

மெய்தான் அரும்பி விதிர் விதித்து, கைதாள்  தலைமேல்  வைத்து கண்ணீர்  ததும்பி வெதும்பி  கந்­தப்­பெ­ரு­மானை  வழி­ப­டு­கின்ற காட்சி கண்­கொள்ளாக்  காட்­சி­க­ளாகும். 

நல்லூர்க் கந்தன் ஆலய வீதி­களில் எத்­த­னையோ  சித்­தர்­களும் மகான்­களும் ஞானி­யர்­களும் பக்­தர்­களும்  பண்­ணோடு  இசை­பாடி, அவர்­க­ளு­டைய பொற்­பா­தங்கள்  எல்லாம் பதிந்த பெரு­மை­யு­டை­யது. முரு கப் பெரு­மானை  வலம் வந்து  வீதி­களில்  அடி­யார்கள் உருண்டும் பிரண்டும்  ஆடியும்  பாடியும்  வழி­பட்டு  வரு­கின்­றார்கள். இப்­ப­டி­யாக  முருகப் பெரு­மானை வலம் வந்­து­வ­ழி­பட்டால் நமது  பாவங்கள்  எல்லாம்  பறந்­தோடி விடும் என்ற  நம்­பிக்கை அடி­யார்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. அடி­யார்­களும் பண்­ணோடு  திரு­மு­றை­க­ளைப்­பாடி வலம் வரு­கின்­றார்கள்.  

மற்­றைய இடங்­க­ளுக்கு  இல்­லாத  சிறப்பு நல்லூர் தேர­டிக்­குண்டு. முத்­தர்­களும்  சித்­தர்­களும்  ஞானி­களும்   ஆடிப்­பாடி நிற்­பது  நல்லூர்க் கந்தன்  ஆல­யத்­திற்கு  சிறப்­பாக அமை­கின்­றது. இவ்­வா­ல­யத்தில் முருகப் பெரு­மானை  தேரடிச் சித்தர் செல்­லப்பா சுவாமிகள், யோகர்  சுவாமிகள்  முதலியோர்  வழிபட்டு இவ்வாலய வீதிகளில் உலாவி  வந்திருப்பது இவ்வாலயத்திற்கும் இங் குள்ள சைவ நன்மக்களுக்கும்  பெருமை சேர்க்கின்றது. செல்லப்பா சுவாமிகளும் யோகர் சுவாமிகளும் நல்லூர்த்  தேரடியில்   வாழ்ந்தவர்கள். நல்லூர்த் தேரடிக்கு மாத் திரம் எவ்வாறு சிறப்புகள் வந்தது என்பதை  நாம் நோக்குவோமேயானால் இவர்கள் இருவரும் நல்லூர்த் தேரடியில் வாழ்ந்தமை தான் காரணமாகும். அடியார்கள் இவற்றை அறிந்து பக்திப் பரவசமடைகின்றனர். 

“நல்லூரான்  திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில்  எல்லாம் மறப்பேனடி” என் பது  யோகர் சுவாமிகளின் பாடலாகும். 

“நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப் போய்  நல்ல மனத்தோடு நாம் பணிந்தால் நல்ல மயில்  ஏறிவந்து காட்சி கொடுப்பான் எழில் முருகன்  தேறிவிடும் சிந்தை தெளி”  மண்ணில் நல்ல வண்ணம் வாழ  நல்லூர்க் கந்தன்  அருள்புரிவாராக.