அரசாங்கம் துணிந்து முடிவுகளை எடுத்து ஆட்சியை முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் சபை யில் வலியுறுத்தியதோடு ஜனநாயகத்திற்கு விரோதமான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக அரசாங்கத்தினை கவிழ்க்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அத்தியாவசிய சேவைகளாக பெற்றோலிய உற்பத்திகள், திரவ எரிவாயு, உட்பட அனைத்து எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியால் பிரசுரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையினை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாங்கள் இன்று ஜனாதிபதியின் பிரகடனத்தினைப் பற்றி இங்கு விவாத்தித்துக்கொண்டிருக்கின்றோம். இந்த விடயம் சம்பந்தமாக நானும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன். இந்த நாட்டில் நீண்டகாலமாக தொழிற்சங்கள் இருக்கின்றமையை அவதானித்திருக்கின்றோம். ஜனநாயக சமூகத்திற்கு தொழிற்சங்கள் முக்கியமானவை.
தொழிலாளர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும். தொழிற்சங்களை கௌரவப்படுத்துகின்றோம். எமது ஆதரவுகளையும் வழங்கியிருக்கின்றோம். சில சமயங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போது தமது கருத்துக்களை முன்வைக்கின்றார்கள்.
குறிப்பாக உத்தேச கருத்திட்டங்களுக்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். தொழிற்சங்க செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு அவசியமானதாக இருந்தாலும், ஜனநாயக விரோதமான தொழிற்சங்கப் போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
பாராளுமன்றத்தில் எனக்கு முன்னர் உரையாற்றியிருந்த தினேஷ் குணவர்த்தன, பல விடயங்களில் தோல்வியடைந்துள்ள அரசாங்கம் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார். உள்ளூராட்சி தேர்தல்களையோ அல்லது மாகாணசபைத் தேர்தல்களையோ அவர் கோரவில்லை.
பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றே கூறினார். அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்பதே அவர்களின் தொடர்ச்சியான நோக்கமாக இருக்கிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார். மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் ஆணை வழங்கினார்கள். மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு முதலில் மதிப்பளிக்க வேண்டும்.
அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராகக் கொண்டு போட்டியிட்டனர். இருந்தபோதும் மக்கள் அவரை பிரதமர் ஆவதற்குக் கூட அனுமதி வழங்கவில்லை. ஆட்சிசெய்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு காலமொன்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதாயின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து அதில் வெற்றிபெறுவதன் ஊடாகவே கவிழ்க்க முடியும்.
மக்களின் தீர்ப்பு காணப்படுகின்றது. மக்களின் தீர்ப்பு மாறாக என்னிடத்திலிருந்து என்ன ஆதரவை எதிர்பார்க்கின்றீர்கள். அத்தியாவசிய சேவைகளை முடக்கும் வகையிலான தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளை ஏற்க முடியாது.
ஜனநாயக ரீதியாக இல்லாத விடயங்களை வைத்து உரிமைகள் வேண்டுமென போராட முடியாது. இந்த நாட்டில் பல்வேறு முட்டுக்கட்டைகள் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் என்றே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை.
ஆகவே அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். அரசாங்கம் வினைத்திறனுடன் இருக்க வேண்டுமாக விருந்தால் துணிந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அந்த தீர்மானங்களை தைரியமாக நடைமுறைப்படுத்தி அரசாங்கம் தனது ஆளுகையை உறுதிப்படுத்த வேண்டும்.
காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அமைக்கும் விவகாரத்தில் இராணுவத்தினரை காட்டிக் கொடுப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். பிராந்தியத்தின் சிறந்த இராணுவத் தளபதி என பாராட்டப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பின்னர் நடத்தப்பட்ட முறையை பார்த்தோம்.
எவ்வளவு தூரம் நிந்தித்து நடத்தப்பட்டார். அவருடைய பதவி கூட பறிக்கப்பட்டது. இராணுவத்தினர் மீது அவர்கள் கொண்டிருக்கும் கரிசனை தொடர்பில் சந்தேகம் ஏற்படுகின்றது. நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்.
இனவாதத்தினை ஊக்குவித்து மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தினால் எதனையும் சாதிக்க முடியாது. நல்லிணக்கத்தின் மூலமாக தான் சுபீட்சமான சிறந்த காலத்திற்கு செல்ல முடியும். ஆகவே ஆட்சியை செய்வதற்கு இடமளித்து மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.