மிகவும் சூட்சுமமான முறையில் மலவாயிலில் மறைத்து வைத்திருந்த பெருந்தொகையான வெளிநாட்டு நாணயத்தாள்களை  சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்ல முற்பட்டவரை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரை சேதனையிட்டபோது மிகவும் நுட்பமான முறையில் இரு கட்டுகளாக கட்டப்பட்டு  ஒரு கோடியே 35 இலட்சத்து 69 ஆயிரத்து 775 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை கைப்பற்றினர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய தச்சுத் தொழிலாளியென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் தனது மலவாயிலில் 48 ஆயிரம் சுவிஸ் பிராங்க,  29 ஆயிரத்து 500  யூரோ,  20 ஆயிரம் நோர்வே குரோணர் ஆகியவற்றை மலவாயில் மறைத்து வைத்து சிங்கப்பூருக்கு கடத்த முற்படுகையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களை அரசுடைமையாக்கியதுடன் குறித்த நபருக்கு 3 இலட்சம் ரூபா அபராதத் தொகை விதிக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.