கிரிவுல்ல - அதுருவெல பிரதேசத்தில் கிணற்றில் வீழ்ந்து மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள வரவேற்பு மண்டபத்தில் திருமண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த திருமண நிகழ்விற்கு வந்திருந்த ஒருவர், வரவேற்பு மண்டப வளாகத்தில் பலகைகளினால் மூடுப்பட்டிருந்த கிணற்றில் வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை காப்பாற்றுவதற்காக இருவர் முற்பட்டுள்ள நிலையில், அவர்களும் கிணற்றில் வீழ்ந்துள்ளார். 

இந்நிலையில், குறித்த நிகழ்வுக்கு வந்திருந்த ஏனைய தரப்பினர் கிணற்றில் வீழ்ந்த மூவரையும் கிணற்றில் இருந்து மேலே கொண்டுவந்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், அவர்கள் மூவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 38, 39 மற்றும் 41 வயதான அதுருவெல மற்றும் மாரவில பிரதேசங்களை சேர்ந்தவர்களாவார்.

சடலங்கள் தற்போது தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பில் கிரிவுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.