இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் விருது வழங்கும் விழாவில், 2016 ஆம் ஆண்டின்  சிறந்த  இணையத்தளத்திற்கான  தங்க விருதை வீரகேசரி இணையத்தளம் தன்வசப்படுத்தியுள்ளது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் விருது வழங்கும் விழாவில் இம் முறை முதன்முறையாக  இணையத்தளங்களுக்கான விருது பரிந்துரைக்கப்பட்ட நிலையில்  ஆண்டின்  சிறந்த இணையத்தளத்திற்கான  தங்க விருதை  வீரகேசரி இணையத்தளம் தன்வசப்படுத்தியமை விசேட அம்சமாகும்.

கல்கிசை  மவுட்லவேனிய ஹோட்டலில்  இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் விருது வழங்கும் விழாவிலேயே வீரகேசரி இணையத்தளத்திற்கு இவ் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின்  செய்தி இணையத்தளங்களில் முதன்மையன வீரகேசரி இணையத்தளம் கடந்த 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. “தமிழ் கூறும் நல்லுலகை ஒன்றிணைக்கும்  இணையத்தளம் ” என்ற தாரக மந்திரத்தை ஏற்று உலகில் வாழும் தமிழ் இணையத்தள வாசகர்களை தன்னுள் ஈர்த்து வைத்துள்ளது. 

இதேவேளை, மொறட்டுவை பல்கலைக்கழகத்தால் கடந்த 2010 ஆம் ஆண்டு  “இலங்கையின் முதல்தர செய்தி இணையத்தளம்“ என்ற விருது வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் முதல்முறையாக இலங்கை பத்திரிகை நிறுவனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர்களுக்கான விருது - 2016 இல்  சிறந்த இணையத்தளத்திற்கான  தங்க விருதை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த உயரிய விருதை வீரகேசரி இணையத்தளம் வென்று சாதனை படைப்பதற்கு பக்கபலமாக இருந்த எமது இணையத்தள வாசகர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் வீரகேசரி இணையத்தளம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.