உலகளாவிய ரீதியில் பல ரசிகர்களின் ஆதரவைப்பெற்ற பிரபல லின்கின் பாக் இசைக்குழுவின் பிரதான பாடகர் செஸ்டர் பெனின்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாடகர் செஸ்டர் பெனின்டன் தற்கொலை தொடர்பில் அவரது ஊடகப்பேச்சாளர் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரிலுள்ள தனது வீட்டில் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையிலேயே பாடகர் பெனின்டன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி பிறந்த செஸ்டர் சிறு வயதில் இருந்து குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் மன அழுத்தத்தின் காரணமாகவே போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.

பாடகராகி பிரபலமானதன் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்ட செஸ்டர்,

“பல துயரங்களுடன் குழந்தை பருவத்தை தான் அனுபவித்துள்ளதாகவும் தனது 7 வயதில் 13 வயதுடைய இளைஞன் மூலம் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதால் தற்கொலை முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளதாக அவரது ஊடகப்பேச்சாளர் மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும் இரண்டு திருமணங்கள் மூலம் ஆறு குழந்தைகள் இவருக்கு உள்ளனர். அதிக மது அருந்துதல் காரணமாக உளவியல் ஆலோசனை பெற்று வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் “கிரே டேஷ்” , “ஸ்டோன் டெம்பல் பயிலட்ஸ்” , “டெட் பை சன்ரைஸ்” போன்ற இசைக்குழுக்களில் பாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டில் இல் பாடிய “ரைடர்ஸ் ஒன் தி ஸ்டரோம்” எனும் பாடலே செஸ்டரின் இறுதிப்பாடல் அதன் பின்னர் அவர் புதிதாக எந்தப்பாடலையும் பாடவில்லை.

2016 ஆம் ஆண்டு தான் இனி மது அருந்த மாட்டேன் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார் என அவரது ஊடகப்பேச்சாளர் உருக்கமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இவருடைய “நம்ப்” பாடல் இலங்கை மற்றும் மேற்கத்தேய இசப்பிரியர்களின் பெரும் ஆதரவைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.