சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரொருவர் பார்வையாளர்களை திகைப்புக்குள்ளாக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டுள்ளார்.

கான்பெராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இடம்பெறும் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் நடுவராக பணியாற்றும் ஜோன் வோர்ட் என்ற நடுவரே இவ்வாறு தலைக்கவசம் அணிந்து கடமையாற்றுகின்றார்.

பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட்  காப்பாளரும் துடுப்பாட்ட வீரர்களும் மற்றும் முன்னணி களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்களுமே தலைக்கவசம் அணிந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிசயமான முறையில் போட்டி நடுவரான ஜோன் வோர்ட் தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபடுவதை அவதானித்த பார்வையாளர்கள் திகைத்துப்போயுள்ளனர்.

இதேவேளை, திண்டுக்கலில் இடம்பெற்ற ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது தமிழ்நாட்டு அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இதன்போது நடுவராக  ஜோன் வோர்ட்  கடமையாற்றியிருந்தார்.

குறித்த போட்டியில் துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து ஜோன் வோர்ட் தலையைத் தாக்கியதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

இதனால் நடுவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.  இதனால்தான் இன்றைய போட்டியில் அவர் முன்னெச்சரிக்கையாக தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவரொருவர் தலைக்கவசம் அணிவது இதுதான் முதல் முறையாக இருந்தாலும் அண்மையில் இந்தியாவில் விஜய் ஹஸாரே தொடரின்போது பெங்களூரில் இடம்பெற்ற போட்டியில் நடுவர் பாஸ்சிம் பதக் தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டிருந்தார்.

இதேவேளை, வீரர்களைப் போல நடுவர்களின்  பாதுகாப்பும் முக்கியம் என்று முன்னாள் அவுஸ்திரேலிய நடுவர் சைமன் டபெல் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அவுஸ்திரேலிய நடுவர்  ஜோன்  வோர்ட் தற்போது தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.