இந்திய ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின்  வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் 7,02,044 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் 3,67,314 வாக்குகள் பெற்றிருந்தார். 

தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 10,69,358 ஆகும்.

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களையும் சேர்ந்த  (பிரதமர் அடங்கலாக ) 776 பாராளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கப்பது நடைமுறை.

ஒவ்வொரு வாக்கிற்கும் மாநிலங்களின் அடிப்படையில் பெறுமானம் நிர்ணயிக்கப்பட்டு அவை மாநிலங்களின் அடிப்படையிலான வாக்குகளாக கணக்கிடப்பட்டு அவ்வாக்குகள் இறுதி மொத்த வாக்குகளாக கணிக்கப்படும். 

ஜனாதிபதி தேர்தலில் தமக்கு கிடைத்த வெற்றி இந்திய ஜனநாயகத்தின் சிறப்பிற்கு சிறந்த ஆதாரமென ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

இந்தத் தேர்தலில் தம்மை ஆதரித்த சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாக திரு.கோவிந்த் தெரிவித்துள்ளார். 

இவர் இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார். இந்த தேசத்தின் குடியரசுத் தலைவர் பதவிக்கு தெரிவாகும் இரண்டாவது தலித் ராம்நாத் கோவிந்த் ஆவார். முதல் தலித் என்ற பெருமை கே.ஆர். நாராயணனுக்கு உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி விவசாயக் குடும்பத்தில் ராம்நாத் கோவிந்த் பிறந்தார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.

இதன்பிள்ளர் டெல்லி உயர்நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.

வழக்கறிஞர் என்ற முறையில், தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், ஏழை பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு சட்ட உதவி வழங்கி உள்ளார்.

1977 ஆம் ஆண்டு இந்தியாவில் நிருவாகத்திலிருந்த ஜனதா அரசில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக பணியாற்றினார். இதுதான் ராம்நாத் கோவிந்த்தின் அரசியல் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.

அதன்பிறகு பா.ஜ.க. வில் சேர்ந்த இவர், உத்தரபிரதேச மாநிலம் காதம்பூர் மக்களவை தொகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக செயல்பட்டார்.

இதையடுத்து, உத்தர பிரதேசத்திலிருந்து 1994 இல் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 2 முறை 2006 ஆம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

பா.ஜ.க.வின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசிய தலைவராகவும் (1998 2002) கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஹார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.