இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கண ஹேரத் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்படி ரங்கண ஹேரத் 866 புள்ளிகளைப்பெற்று 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

முதலாமிடத்தில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். இவர் 898 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

தொடர்ந்து 3 ஆவது இடத்தை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார். இவர்  865 புள்ளிகளைப்பெற்றுள்ளார்.

இந்நிலையில், நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ரங்கண 8 முறை 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 4 ஆவது இடத்தைப்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிம்பாப்வே அணிக்கெதிராக இடம்பெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் ரங்கண ஹேரத் இரு இன்னிங்ஸிலும் மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 8 முறை பத்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் கும்ளேயின் சாதனையை சமன் செய்துள்ளார்.