பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் 10 தினங்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும். இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்துக்குரிய விளையாட்டு மைதானத்தின்  காணியை, பிரிதொரு நபர்கள் அபகரித்து வேலி அமைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அப்பிரதேச மக்கள்  மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்க அழைப்பு விடுத்திருந்தனர் இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற தேரர் அத்தமீறி பிடிக்கப்பட்ட காணிகளை பார்வையிட்டார். சில உறுதிமொழிகளையும் வழங்கினார்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய தேரர், 

சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்துக்குக்கொண்டு செல்லவுள்ளதாகவும் 10 தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்துக்குள் அத்துமீறிய குடியேறியவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும். 

இல்லாவிடில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அத்துமீறி அமைக்கப்பட்ட வேலிகள் குடிசைகளை அகற்றி அதனை மீட்டுத் தருவதாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு தேரர் உறுதியளித் ததையடுத்து ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து பகல் 11 மணிக்கு விலகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.