யாருடா மகேஷ் என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, மாநகரம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சந்தீப் கிஷன். இவர் தற்போது தயாரிப்பாளர் சி.வி குமார் இயக்கத்தில் மாயவன் என்ற படத்திலும், சுசீந்திரன் இயக்கத்தில் அறம் செய்து பழகு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது துருவங்கள் பதினாறு என்ற வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து ‘நரகாசுரன்’ என்ற படத்தில் சந்தீப் கிஷன் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரும், நடிகர் ஆதியும் இணைந்து நடித்த சமந்தாகாமனி என்ற படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இவர் தனக்கு மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்ட போது, ‘நான் திரைத்துறையில் ஒரு உதவி இயக்குநராகத்தான் அறிமுகமானேன். அதிலும் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ்விடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அவரிடமிருந்து விலகி நடிக்கத் தொடங்கிய பிறகு அவர் எனக்கு எந்தவொரு வாழ்த்து செய்தியையும் அனுப்பவில்லை. 11 ஆண்டுகள் கழித்து மாநகரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டு தெரிவித்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அந்த தருணம் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’ என்று பதிலளித்திருக்கிறார்.

இதனிடையே சந்தீப் கிஷன் தற்போது நடித்து வரும் நரகாசுரன் என்ற படத்தினை இயக்குநர் கௌதம் வாசுதேவ் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்