பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தும் நோக்கில் வீட்டிற்குள் கத்தியுடன் பிரவேசித்த நபரொருவர், குறித்த பெண்ணினால் நாக்கு கடித்து துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. 

தென்னாபிரிக்காவின் பிறீ மாநிலத்தில் ரெயிட்ஸ் எனும் கிராமத்திலுள்ள 38 வயது பெண்ணின் வீட்டிற்குள் சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதுடைய நபர் கத்தியுடன் பிரவேசித்து வீட்டிலிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்றுள்ளார்.

குறித்த பெண் சற்றும் அஞ்சாமல் சந்தேகநபருடன் போராடியுள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் அந்நபரின் நாக்கை பற்றிப் பிடித்த அந்தப் பெண் தனது பற்களால் குறித்த நபரின் நாக்கைக் கடித்து துண்டாக்கியுள்ளார். 

இதனையடுத்த வலி தாங்காது துடித்த அந்த நபர் வாயில் இரத்தம் வழிந்தோட துண்டிக்கப்பட்ட நாக்குடன் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். தற்போது அவரது துண்டிக்கப்பட்ட நாக்கை அவருக்கு மீளப் பொருத்தும் நடவடிக்கையில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.