(லியோ நிரோஷ தர்ஷன் )

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தும் இலங்கையில் தொடர்ந்தும் தடுப்பில் உள்ளவர்கள் மீது சித்திரவதையும் பாலியல் வன்முறையும் இடம்பெறுகின்றது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில் இடம்பெற்ற சட்ட விரோத தடுப்புகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த புதிய ஆதாரங்களின் அடிப்படையிலான அறிக்கையினை சர்வதேச உண்மை மற்றும் நீதிகள் குறித்த திட்டம்  வெளியிட்டுள்ளது.

இலங்கை பாதுகாப்பு படைகளின் சித்திரவதைகள் 2016/17 என்ற தலைப்பில் வெளியிடப்படவுள்ள குறித்த புதிய அறிக்கையானது 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான சம்பவங்களை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிகள் குறித்த திட்டம் நிறைவேற்று பணிப்பாளர் இந்த புதிய அறிக்கையை தயாரித்துள்ளார். 

இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. புதிய அரசு பதவிக்கு வந்து 30 மாதங்கள் கடந்தும் குறித்த வலையமைப்புக்களை கலைக்க தவறி விட்டன. மிகப்பெரிய இராணுவ முகாம்களில் உள்ள சித்திரவதை கூடங்கள் மனித  கடத்தல்கள் அச்சுறுத்தி இலஞ்சப் பணம் பறித்தல் போன்ற விடயங்கள் இந்த குற்ற செயல்களில் அடங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு  நிபுணர்களில் ஒருவரான ஜஸ்மின் சூகா தலைமையில் இயங்கிவரும் மேற்படி மனித உரிமை நிறுவனத்தின் இவ் ஆதார அறிக்கையானது முன்னாள் ஊடகவியலாளரான பிரான்சிஸ் கரிசன் மற்றும் சட்டத்தரணிகளான அருண் கணநாதன், கீத் குலசேகரம் ஆகியோரின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.