பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அம்மையாரின் அழைப்பின் பேரில் பங்களாதேஷிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று நண்பகல் டாக்கா நகரில் நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலுள்ள இருதரப்பு உறவுகளை மேம்படுத்தல் தொடர்பாக இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்படும்.

விவசாயம், கல்வி, வெளிநாட்டலுவல்கள் பயிற்சி, குடிவரவு மற்றும் குடியகல்வு ஆகிய துறைகளில் பல புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன. 

பங்காளாதேஷில் லாப் கேஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நேற்று டாக்கா நகரில் இடம்பெற்ற விசேட வர்த்தக சந்திப்பிலும் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொண்டார். 

லாப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டப்ளியு.கே.எச்.வேகபிட்டியவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் முதலீடுகள் மற்றும் வர்த்தக சந்தர்ப்பங்கள் தொடர்பான விசேட விரிவுரையொன்றை ஆற்றினார். 

பங்களாதேஷின் மின்சக்தி மற்றும் வலுச்சக்தி இராஜாங்க அமைச்சர், வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.