பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின்பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று முற்பகல் பங்களாதேஷ் டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பதனால், அவருக்கு கோலாகலமான வரவேற்பினை அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.

டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை பங்களாதேஷின் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட்  மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடன் கோலாகல வரவேற்பும் அளிக்கப்பட்டது.

மேலும் இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் தேசிய கொடிகளினால் டாக்கா சர்வதேச விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை இருநாடுகளுக்குமிடையிலான நட்பினை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதி வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்தனர்.

1972 ஆம் ஆண்டில் ஆரம்பமாகிய இலங்கை, பங்களாதேஷ் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி, இருநாடுகளுக்கிடையிலுள்ள பொருளாதார, வர்த்தக தொடர்புகளை புதுப்பொலிவுடன் முன்னோக்கிக் கொண்டுசெல்லல் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கமாக அமைவதுடன், பங்களாதேஷ் பிரதமர் உள்ளிட்ட உயர் மட்ட அமைச்சர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

இருநாடுகளுக்குமிடையே விவசாயம், கல்வி, வெளிவிவகார பயிற்சிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற துறைகளில் புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன. இலங்கை, பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே முதலீடுகள் மற்றும் சந்தை வாய்ப்புக்கள் தொடர்பாக கண்டறிவதற்காக வர்த்தக சமூகத்துடனான சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் லால் கிரேரு, வசந்த அலுவிகார, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, நிசாந்த முதுஹெட்டிகம ஆகியோரும் ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.