இன்றைய திகதியில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டேயிருக்கிறது. உடல் உழைப்பு குறைப்பு, உடற்பயிற்சியின்மை, மாற்றியமைத்துக் கொண்ட உணவு வகைகளும், உணவு பழக்கவழக்கங்கள் ஆகிய காரணங்களால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதில் பலர் தங்களின் சர்க்கரை அளவை தாங்களாகவே தினமும் பரிசோதித்து கொள்கிறார்கள். 

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சில கருவிகள் மூலம் சோதனை செய்து தாங்களாகவே அறிந்து கொள்கின்றனர். தினமும் பரிசோதனை நடத்தி அதற்கு தகுந்தவாறு உடல் நிலையை கவனித்துக் கொள்கின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தவர்கள் தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். குறைந்த அளவில் இருப்பவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். உணவில் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மேற்கொள்கின்றனர்.  

இந்த நிலையில் இன்சுலின் ஊசி மருந்து பயன்படுத்தாத ‘டைப் 2’ நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தினமும் தாங்களாகவே பரிசோதிக்க வேண்டியதில்லை. வைத்தியர்கள் அறிவுரையின்படி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் முறைப்படி தினமும் உடற்பயிற்சி செய்தால் போதும், சர்க்கரை நோய் கட்டுப்படும். மாறாக அவர்களாகவே சர்க்கரை அளவு பரிசோதனை செய்து நீரிழிவு நோய் எதிர்ப்பு மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்தால் மயக்கம், கண் பார்வை பாதிப்பு, மூளை பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு போன்றவை பக்கவிளைவுகள் ஏற்படும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு இருப்பதற்கு தகுந்தவாறு 3 மாதத்துக்கு ஒரு முறை மருந்து, மாத்திரைகளை மாற்றி டொக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். எனவே அதற்குரிய மாத்திரைகளை சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் எதிர் விளைவுகள் ஏற்படும் . அதே சமயத்தில் இன்சுலின் பயன்படுத்தும் ‘டைப்-2’ நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தினமும் பரிசோதித்து கொள்வது அவசியம். 

வைத்தியர்.ராஜேஷ்  

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்