இலங்கையின் PR Wire நிறுவனம், பெருமதிப்பு மிக்க PR World Awards® விருதுகள் நிகழ்வில் தனியொரு கிளையைக் கொண்டுள்ள அலுவலகப் பிரிவில் தங்க விருதை வென்று சாதனை படைத்துள்ளது. 

உலகிலுள்ள அனைத்து பாரிய தொழிற்துறைகளின் மத்தியிலும் வெகுசன உறவுமுறைகள், சந்தைப்படுத்தல், வர்த்தகத் தொடர்பாடல்கள், முதலீட்டாளர் உறவுமுறைகள் மற்றும் வர்த்தக மேம்பாட்டு தொழில்சார்ந்தவர்கள், அணிகள், திணைக்களங்கள் மற்றும் சாதனைகள் தொடர்பில் உலகின் மிகச் சிறந்தவற்றை உள்ளடக்கும் வகையில் பெருமதிப்புமிக்க PR World Awards நிகழ்வு வருடாந்தம் இடம்பெற்று வருகின்றது.

டுபாய், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சார்ந்த வெகுசன உறவுமுறை நிறுவனங்கள் ஏனைய பிரிவுகளில் தங்க விருதுகளை வென்றுள்ளன. ஜுன் 26, திங்கட்கிழமையன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் இடம்பெற்ற வருடாந்த 2017  SVUS செங்கம்பள விருதுகள் வைபத்துடனான இரவு விருந்து நிகழ்வில் வெற்றியாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

“மதிப்புமிக்க இத்தொழிற்துறை மற்றும் அங்கத்துவ உலக அங்கீகாரமாக அமையப்பெற்றுள்ள PR World Awards விருதுகள் நிகழ்வில் தங்க விருதின் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை மிகுந்த கௌரவமாகும்,” என்று PR Wire நிறுவனத்தின் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷான் குமார் குறிப்பிட்டார்.

“எமது மகத்தான பணிகளுக்கும், மிகச் சிறந்த சர்வதேச நடைமுறைகளை இலங்கையில் அறிமுகப்படுத்தும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் தொழிற்துறையில் புத்தாக்கத்தை நாம் அறிமுகப்படுத்தி வருவதற்கும் இவ்விருதுகள் மிகச் சிறந்த சான்றாகும். மதிப்புமிக்க எமது அனைத்து வாடிக்கையாளர்கள் மற்றும் எமது நாட்டின் ஊடகத்துறைக்கு இவ்விருதை நான் சமர்ப்பணம் செய்கின்றேன். மிக முக்கியமாக எமது அணி உட்பட எமது வழங்குனர்கள் அனைவரும் ஆற்றியுள்ள பங்களிப்பையும் இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

பிரதான ஊடகங்களை எட்டுதல் முதல் புதிய ஊடகங்களுடன் ஈடுபாடுகளை ஏற்படுத்தல் வரை சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களுக்குத் தேவையான அனைத்து ஆலோசனைகள் மற்றும் சேவைகளையும் PR Wire வழங்கி வருகின்றது. இலங்கையில் ஆழ வேரூன்றியுள்ளதுடன், தனது சர்வதேச ஆலோசனை அணியின் வழிகாட்டலுடன் நிறுவனங்கள் தமது தொடர்பாடல் சார்ந்த இலக்குகளை அடையப்பெறுவதற்கு இந்த முகவர் நிறுவனம் உதவி வருகின்றது. நிறுவனத்தின் காற்தடத்தை சர்வதேசரீதியாக விஸ்தரிக்கும் மற்றுமொரு முக்கியமான படியாக, இந்த ஆண்டின் நிறைவில் ஏனைய நாடுகளுக்கும் தனது தொழிற்பாட்டை விஸ்தரிப்பதற்கு அது திட்டமிட்டுள்ளது. உலகின் மிகவும் பாரிய வெகுசன உறவுமுறைகள் நிறுவனமான Edleman இன் ஒரு உறுப்பு நிறுவனமாக PR Wire திகழ்ந்து வருகின்றது. இலங்கையில் முதன்முதலாக காபன் வெளியீடற்ற  (CarbonNeutral®) சுயாதீன வெகுசன உறவுமுறை முகவர் நிறுவனமாகவும் மாறி அது சாதனை படைத்திருந்தது.

வருடாந்த PR World Awards விருதுகள் நிகழ்வானது அமெரிக்காவின் Silicon Valley இன் SVUS Awards® இனங்காணல் அங்கீகார நிகழ்வின் ஒரு அங்கமாக உள்ளதுடன், CEO World Awards, Consumer World Awards, Customer Sales and Service World Awards, Golden Bridge Awards, Globee Fastest Growing Private Companies Awards, Info Security PG’s Global Excellence Awards, Network Products Guide’s IT World Awards, Pillar World Awards, மற்றும் Women World Awards போன்ற ஏனைய விருது நிகழ்வுகளையும் உள்ளடக்கியுள்ளது.