மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கஞ்சா மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் தப்பியோடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு படகுமூலம் கேரளா கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து மண்டபம் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அரியமாண் கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஆட்கள் இல்லாமல் நின்று கொண்டிருந்த சொகுசு காரை சோதனை செய்த போது அதில் 90 கிலோ கேரளா கஞ்சா மற்றும் தடை செய்யப்ட்ட கடல் அட்டைகள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சொகுசு கார் மற்றும் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த மண்டபம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தனி படை அமைத்து தேடி வருகின்றனர். 

பறிமுதல் செய்யப்பட்ட கேரளா கஞ்சா மற்றும்  கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் முப்பது  இலட்சம் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 தினங்களில் மன்னர் வளைகுடா கடலோரப்பகுதிகளில் சுமார் ரூ ஒரு கோடி ரூபா மதிப்பிலான  தடைசெய்யப்பட்ட கடல்அட்டைகள் மற்றும் கஞ்சா ஆகியன  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புவட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.