வத்தளை - மஹபாகே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுல் பொக்குண தேவாலயம் அருகில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளார்.

 ஜீப் வண்டியில் பயணித்துக்கொன்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மஹபாகே பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 7.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் போது அந்த ஜீப் வண்டியை செலுத்திச் சென்ற சாரதியே படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த சாரதி  மஹபாகே மகுல் பொக்குண பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கும் பொலிஸார் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம், துப்பாக்கிதாரிகளின் இலக்கு குறித்து விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு வரை சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில் மேல் மாகாணத்தின் வட பிராந்தியத்துக்கு பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய மஹபாகே பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.