பேஸ்புக் மூலம் அறிமுகமான நபரினால் தன் வாழ்க்கையும் முகத்தையும் சென்னையினை சேர்ந்த மாணவியொருவர் பறிகொடுத்த சம்பவம் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி கிராமத்தில் பஸ் நிறுத்தும் இடத்தின் அருகே கடந்த முதலாம் திகதி காலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த 23 வயது மதிக்கதக்க மாணவி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பெண் சுயநினைவு அடைந்தமையால் அவருக்கு நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுயநினைவுக்கு வந்த பெண்ணிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது அந்த இளம்பெண் கூறியதாவது:-

எனது பெயர் சக்தி. சொந்த ஊர் சென்னை கொளத்தூர். நான் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாவது வருட பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனக்கும், சேலத்தைச் சேர்ந்த லொறி சாரதி முரளி என்பவருக்கும் இடையே ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. அப்போது முரளி என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறினார். அவரை நான் நம்பினேன். கடந்த மாதம் 28 ஆம் திகதி அவர் சென்னைக்கு வந்து என்னை ஒரு காரில் அழைத்து சென்றார்.

அங்கிருந்து நாங்கள் மதுரை, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு சென்றோம். பின்னர் பெங்களூர் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முரளி கூறினார். திடீரென்று பண்ருட்டிக்கு காரில் அழைத்து வந்தார். அங்குள்ள வீதியோர கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.

நாங்கள் சந்தோ‌ஷமாக இருந்தோம். அப்போது நமக்கு வாழ்க்கை நடத்த போதிய பணமில்லை. மேலும் பெற்றோருக்கு தெரியாமல் நாம் திருமணம் செய்து கொண்டதால் அவர்கள் வருத்தப்படுவார்கள். இதனால் நாம் தற்கொலை செய்து கொள்வோம் என்று முரளி கூறினார்.

இதையடுத்து இருவரும் பண்ருட்டி அருகே உள்ள ஒரு முந்திரி காட்டுக்கு சென்றோம். அப்போது முரளி முதலில் நீ இறந்து விடு. என்னை ஒரு பெண் ஏமாற்றி விட்டாள். அவளை கொன்று விட்டு இதே இடத்துக்கு வந்து நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறினார்.

திடீரென்று அவர் எனது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். நான் அலறினேன். அவர் கண்டுகொள்ளவில்லை. அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் என்னை காப்பாற்றி விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

மாணவியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம் செய்து உல்லாசம் அனுபவித்து விட்டு தீ வைத்து எரித்துக் கொல்ல முயன்ற காதலன் முரளி தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.