நுவரெலியா மாவட்டத்தில் நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் டெங்குவை ஒழிப்போம் உயிரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் சுகாதார கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நானுஓயா பொலிஸார், கிராம சேவகர், வைத்திய அதிகாரி ஆகியோரின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலை வளாகம் மற்றும் வடிகான்கள் அதனை அண்டிய பிரதேசங்களும் அசுத்தமடைந்து காணப்படுவதுடன், டெங்கு ஆபத்து மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில் இதனை தடுபதற்காகவே இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இதன்போது டெங்கு பரவுக்கூடிய இடங்களை இனங்கண்டு சுத்தம் செய்ததுடன், குப்பைகள் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மாதம் மாத்திரம் 124 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், நானுஓயா பொலிஸ் பிரிவில் இரண்டு டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மலையக பகுதியில் இடைக்கிடையே மழை பெய்து வருவதனால் நீர்தேங்கும் இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயமும் காணப்பட்டுகின்றது. இதனால் மக்கள் மிகுந்த அவதானதுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.