நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விசைப்படகின் வலையில் சிக்கிய மர்ம படகு குறித்து இந்தியப் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 300 க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் மின்பிடிக்கச் சென்றனர் தங்கச்சிமடத்தை சேர்ந்த ரொனால்ட் என்பவரது படகில் மின்பிடிக்கச் சென்ற முத்துராமலிங்கம், பாதாளம், சீனிவாசன், சேகர் முருகேசன் உள்ளிட்ட ஐந்து பேர் தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நள்ளிரவில் மீன்பிடி வலையில் ஏதோ ஒரு மர்மப்பொருள் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனையடுத்து மீனவர்கள் வலையை சோதித்த போது அதில் பைபர் கிளாஸ் படகு ஒன்று சிக்கியது தெரியவந்தது. 

இந்நிலையில் கரை திரும்பிய படகு உரிமையாளர் சம்பவம் குறித்து மெரைன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் படகை மீட்டதுடன் மிட்கப்பட்ட படகு சுமார் 15 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டதும் இலங்கையைச் சேர்ந்தது எனவும் தெரியவந்தது.

கடலோர காவல்படை பொலிஸார் மீட்கப்பட்ட படகு மீது எவரும்  உரிமைகோராததால் 102 ஆவது வழக்கு பதிவு செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

 மேலும் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளிக்காற்றால் படகு நடுக்கடலில் முழ்கி இருக்கலாம் அல்லது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு பொலிஸாருக்கு பயந்து கடலில் விடப்பட்டதா என்பது குறித்து மத்திய உளவுத்துறை இந்திய கடலோரகாவல்படையினர்  மாநில உளவுத்துறை,கியூபிரிவு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.