தமிழ் சினிமாவைக் காப்பாற்ற ரஜினி என் முன்வரவில்லை என்று திரைப்பட நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியிருக்கிறார். 

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது...

ஜி.எஸ்.டி இந்த சரக்கு - சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால் என்னை கேட்டால், எல்லா துறைகளிலும் விலைவாசி ஏறிவிடும். நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு நாறி விடும். இதிலே நாட்டின் முன்னேற்றம் எங்கே மாறிவிடும்?

இந்த அரசு வந்ததிலிருந்தே எந்த திட்டத்தால் நாட்டிற்கு வந்திருக்கிறது. வளர்ச்சி? வரி.. வரி.. என்று மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி. இந்த பிரதமர் மோடி அரசு அமைந்ததிலிருந்தே மக்களுக்கு இல்லை மகிழ்ச்சி. இதிலே சரக்கு - சேவை வரி விதிப்புக்கு நடத்துக்கிறார்கள் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.

மத்திய அரசே - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் பிராந்திய மொழி படங்களை ஒடுக்க நினைக்காதே - மாநில அரசுகளின் உரிமைகளை மீறி, உள்ளே நுழைய துடிக்காதே! மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே! திரை உலகத்தை பொசுக்காதே!

ரஜினியும் மோடியும் நெருக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் சினிமா கட்டணம் உயர்வு பற்றி ரஜினி இதுவரை வாய் திறக்கவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். ரஜினி ஏன் எதுவும் பேசவில்லை? தமிழ் சினிமா எனது தாய் என்கிறார். ஆனால் இந்த சினிமாவை காப்பாற்ற ரஜினி எதுவும் செய்யவில்லை. எதிர்த்து குரல்கூட கொடுக்கவில்லை. பிரதமருடன் நெருக்கம் இருந்தும் சினிமாவை காப்பாற்ற ஏன்முன் வரவில்லை? சினிமாவை கூட காப்பாற்ற முடியாத ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? அவர் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தெளிவாக பேசவில்லை. வந்தால் என்ன செய்யப் போகிறார்? சினிமாவுக்காக ரஜினி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. ’ என்றார் டி ராஜேந்தர்.

தகவல் : சென்னை அலுவலகம்