முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கான 7 நாள் விஜயத்தை நிறைவு செய்து இலங்கை வந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்தியாவிற்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் புலி வாலை பிடிப்பதாகவே  அமைந்துள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை விஜயத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவை டில்லிக்கு  வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்கள் மஹிந்த  ராஜபக்ஷவின் தரப்பால் மும்முரமாக முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அவர் பாகிஸ்தானுக்கு சென்றார். 

முஸ்லிம் மத ஸ்தலங்களை தாக்குகின்றமை, அந்த சமூகத்தின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கின்ற சம்பவங்கள் மீண்டும் ஆங்காங்கு தொடர ஆரம்பித்துள்ளது. கடந்த ஆட்சியிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைப்பெற்றன. நல்லாட்சியில் மீண்டும் அதே நிலை உருவாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரையும் பாதுகாப்பு துறையினரையும் சந்தித்திருந்தார். 

எவ்வாறாயினும் நாடு திரும்பிய பின்னர் சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிற்கு விற்பணை செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூறி, இந்திய எதிர்ப்பு கோஷங்களை கூட்டு எதிர் கட்சி ஊடாக முன்னெடுத்து வருகின்றார். இதற்கு எதிரான ஆரப்பாட்டம் ஒன்றையும் சீன குடா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் இந்திய எதிர்ப்பு போக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கூட்டு எதிரணி  கடுமையாக முன்னெடுத்து வருகின்றது. 

இந்தியாவின் அழைப்பை உதாசீனம் செய்யும் வகையில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவிற்கும் டில்லிக்கும் இடையிலான விரிசல் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. எவ்வாறாயினும் இது வரையில் இந்திய பிரதமரின் டில்லிக்கான அழைப்பை மஹிந்த ராஜபக்ஷ தீர்மானிக்கவில்லை என அவரது பிரத்தியேக செயலாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.