தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா மதுரையில் இன்று நடைபெறுகிறது. இதற்காக மதுரை ரிங் ரோடு அம்மா திடலில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. விழா நிகழ்ச்சிகள் மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

விழாவுக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பாராளுமன்ற துணைத்தலைவர் தம்பித்துரை சிறப்புரையாற்றுகிறார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கே.டி.ராஜேந்திரபாலாஜி, மணிகண்டன் உள்ளிட்ட 28 அமைச்சர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். 75 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

முன்னதாக எம்.ஜி. ஆரின் புகழ் பரப்பும் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. யோகியார் ராமலிங்கம் தலைமையில் யோகா நிகழ்ச்சியும், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றமும் நடைபெறுகிறது. நாட்டிய கலாலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்கிறார்கள். 5 லட்சம் பேர் விழா மைதானத்தில் திரளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நன்றி கூறுகிறார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழா மதுரையில் நடை பெறுவதையொட்டி மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.  

தகவல் : சென்னை அலுவலகம்